Friday, March 5, 2010

அதிகாலையில் ஆண்டவரோடு

இயேசுவுக்கே மகிமை


அதிகாலையில் ஆண்டவரோடு

அதிகாலை நேரத்தில் இயேசுவின் சமுகத்தில் நாம் நிற்பது மிகவும் உன்னதமான, ஆனந்தமான மற்றும் இன்பமான ஒரு அனுபவம். தேவனாகிய கர்த்தரும் கூட பகலின் குளிர்ச்சியான வேளையில்தான் ஆதாமையும், ஏவாளையும் சந்திக்கும்படி வந்தார். பகலின் குளிர்ச்சியான வேளை என்பது அதிகாலை வேளையே.

ஆதியாகமம் 3:8 பகலில் குளிர்ச்சியான வேளையில் தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்.

ஆண்டவர் இயேசுவும் அதிகாலை வேளையில் ஜெபிக்கும் பழக்கம் உடையவராய் இருந்தார்.

மாற்கு 1:35 அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.

காரணம் காலை தோறும் அவருடைய கிருபைகள் புதிதாயிருக்கிறது என்று வேதம் கூறுகிறது

சங்கீதம் 90:14 நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.

சங்கீதம்143:8 அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும்,

நீதிமொழிகள் 8:17 அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.

பிதாவாகிய தேவன் மோசேயை சந்திக்க விரும்பிய நேரமும் அதிகாலை வேளையே

யாத்திராகமம் 34:2 விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்.

இஸ்ரவேல் ஜனங்களுக்கு மன்னா பொழியப்பட்ட வேளையும் அதிகாலை வேளையே. மட்டுமல்ல அதை இஸ்ரவேல் ஜனங்கள் அதிகாலை வேளையில் பொறுக்கவேண்டும். இல்லை என்றால் வெயில் ஏற ஏற மன்னவானது உருகிப்போகும். அதன்பின்பு அவர்கள் அந்த நாளிலே மன்னாவை பார்க்க முடியாது.

யாத்திராகமம் 16:21 அதை விடியற்காலந்தோறும் அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போம்.

ஆம் அருமை நண்பர்களே அதிகாலை வேளையில் மன்னா பொறுக்கவேண்டியது போல அந்தந்த நாளுக்கு வேண்டிய கிருபைகள் பெற்று கொள்ளவேண்டிய வேளை அதிகாலை வேளையே. எப்பக்கத்தில் திரும்பினாலும் பரிசுத்தமாய் வாழ சூழ்நிலைகள் சாதகமற்ற உலகம். ஆபாச போஸ்டர்கள், செய்திதாள்களில் ஆபாச சினிமா விளம்பரங்கள், பஸ்களில் சினிமா, ஆபீஸ்களில் அரை குறை ஆடையணிந்த பெண்கள், குடிகள், வெறிகள் மற்றும் ஆபாச ஜோக்குகள் என எப்பக்கத்திலும் பரிசுத்தமாய் வாழ சூழ்நிலைகள் சாதகமற்ற உலகம்.


இதே பாவம் நிறைந்த பாபிலோன் தேசத்தில் தான் தானியேல் ஜெயித்தான் எப்படி?


வேசிதனங்களுக்கு தாயாகிய யேசபேலின் அரண்மனையில் ஒபதியா ஜெயித்தான் எப்படி?


தேடிவந்த பாவத்தை துச்சமென தூக்கி எறிந்தான் யோசேப்பு எப்படி?


எல்லாம் தேவ கிருபையே. பாவம் செய்யாமல் நம்மை காப்பதும் தேவ கிருபையே.அதிகாலை வேளையில் தேவசமுகத்தில் காத்திருப்பதில் நானும் குறையுள்ளவனே. தேவன் எனக்கும் உங்களுக்கும் அதிகாலையில் அவர் சமுகத்தில் காத்திருக்க வேண்டிய கிருபைகளை தருவாராக.

கிறிஸ்துவில்அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment