இயேசுவுக்கே மகிமை
சாரோனின் ரோஜாவும் பள்ளத்தாக்கின் லீலியும்
உன்னதப்பாட்டு 2:1 நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலி புஷ்பமுமாயிருக்கிறேன்.
மேற்கூறிய வசனம் நம்முடைய ஆண்டவராகிய இயேசுவை குறிப்பதாகும். சாரோனின் ரோஜா என்பது செந்நிறமான ரோஜாப்பூவை குறிக்கிறது. இது சிலுவையிலே செங்குருதி சிந்திய இயேசுவின் தியாகத்தை குறிக்கிறது. பள்ளத்தாக்கின் லீலி - லீலி புஷ்பமானது வெண்மை நிறத்தை உடையது. இது இயேசுவின் பரிசுத்தத்தையும், தூய்மையையும் குறிக்கிறது.
மேலும் ரோஜா பூவானது பகல் வேளையில் பூத்து வாசனை வீசுகிறது. இது பிரபலமாக அல்லது வெளியே தெரியும் படி செய்யும் ஊழியத்திற்கு ஒப்பிடலாம். ஆனால் லீலி புஷ்பமானது நாடு இரவில் பூத்து தன்னுடைய வாசனையை வீசுகிறது. இது மறைவிடங்களில் ஆத்துமாக்களுக்காக ஜெபிக்கிறவர்களையும் வெளியே தெரியாத படி மலை தேசங்களிலும், கிராமங்களிலும் செய்யும் ஊழியங்களுக்கும் நடு இரவுகளில் யாருக்கும் தெரியாமல் அந்தரங்கமாய் தேசத்திற்காய் ஜெபிக்கிறவர்களுக்கும் ஒப்பிடலாம். மேற்கண்ட இரண்டு ஊழியங்களுமே தேவனுடைய பார்வையில் விஷேசித்தது. அவனவனுக்கு தேவன் அளித்த கிருபையின் படியே அவர்கள் செய்யும் ஊழியங்கள் அவைகள்.
சாரோன் என்பதற்கு திறந்தவெளி என்ற அர்த்தம் உள்ளதாக புத்தகம் ஒன்றில் படித்த ஞாபகம் இருக்கிறது. அப்படி என்றால் சாரோனின் ரோஜா என்பதற்கு திறந்த வெளியில் உள்ள ரோஜா பூ என்று அர்த்தம். ஆம் நம்முடைய அருமை ஆண்டவர் இயேசு திறந்த வெளியிலேயே உள்ளார். யார் வேண்டுமானாலும் அவரிடம் வரலாம். அவர் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று வேலி போட்டு அவரை வைக்கவில்லை. ஆகவே அவர் அகில உலகில் உள்ள சுமார் 600 கோடிக்கும் அதிகமான எல்லா மக்களுக்கும் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடில்லாமல் எல்லாருக்கும் சொந்தமானவர்.
கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment