இயேசுவுக்கே மகிமை
இயேசுவின் நேசம்
உன்னதப்பாட்டு 1 : 2. உமது [இயேசுவின்] நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது.
திராட்சை இரசம் தயாரிக்க வேண்டுமானால், திராட்சை பழங்களை நன்கு கசக்கி பிழிய வேண்டும். அப்பொழுது அதிலிருந்து செந்நிறமான இரசம் வெளியே வரும். அந்த ரசமானது சிலமணி நேரம் ஒரு நிரந்தரமற்ற இன்பத்தை தரவல்லது.
இயேசுவை அறியாதவர்கள் இன்று, மதுபானங்களை அருந்தி தங்கள் குறைவுகளை மறக்க நினைக்கிறார்கள். ஆனால் சில மணிநேரங்கள் மட்டுமே அது சாத்தியமாகிறது.
நீதிமொழிகள் 31 :
6. மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங் கசந்தவர்களுக்குத் திராட்ச ரசத்தையும் கொடுங்கள்;
7. அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.
ஆகவே தான் பிதாவாகிய தேவன், தமது செல்லக் குமாரனாம் இயேசுவை இந்த பூமிக்கு அனுப்பினார். அவரை ரோமப் போர்சேவகர்கள் கசக்கி பிழிந்தார்கள், அப்போது அவருடைய செங்குருதி அவருடைய சிரசிலிருந்து பாதம் வரையிலான காயங்களிலிருந்து வடிந்து வந்தது.
இயேசு இந்த பூமிக்கு ஏன் வந்தார்? கலங்கிய கண்களோடும், உடைந்த உள்ளத்தோடும் வாழும் மனிதர்களுக்கு ஆறுதல் அளிக்கும்படி வந்தார். ஆகவே தான் பரிசுத்த வேதம் கூறுகிறது,
ஏசாயா 61 :
1. கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,
2. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்,
3. சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.
உன்னதப்பாட்டு 1 : 2. இயேசுவின் நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது.
கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment