இயேசுவுக்கே மகிமை
இயேசுவின் இரத்தம்
I யோவான் 1:7 அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
சலவையகம் ஒன்றிற்கு சென்ற ஒரு நபர் சலவை தொழிலாளிக்கு இயேசுவின் அன்பை எடுத்துக் கூறி, இயேசு தன்னுடைய முழு இரத்தத்தையும் சிந்தி எப்படி மனுக்குலத்தை இரட்சித்தார் என்பதை விளக்கிக்கொண்டிருந்தார். சலவை தொழிலாளிக்கோ இயேசுவின் மீதோ அவருடைய இரத்தத்தை குறித்தோ விசுவாசமில்லாதபடியால் அந்த நபரோடு வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார். இயேசு தன்னுடைய ஜீவனையே தியாகம் செய்து, தன் கடைசி சொட்டு ரத்தத்தையும் சிந்தி மனுக்குலத்தை மீட்டார் என்றால் இன்னும் ஏன் கோடிக்கணக்கான மக்கள் பாவத்திலும், சாபத்திலும், நோயிலும், வறுமையிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் இயேசுவும் இல்லை அவருடைய இரத்தமும் இல்லை எல்லாம் ஏமாற்று வேலை என்றார். அந்த நபரும் அவரோடு வாக்குவாதம் செய்ய விரும்பாமல் அந்த இடத்தை விட்டு கடந்து சென்றார்.
சில நாட்கள் கடந்து சென்றது, மீண்டும் அந்த நபர் அந்த சலவையகம் அருகே செல்ல நேர்ந்தது. அப்பொழுது அழுக்கு துணி அணிந்த வயதான முதியவர் ஒருவர் அந்த வழியே நடந்து செல்வதை கண்டார். உடனடியாக முதியவரை அழைத்து கொண்டு சலவையகத்திற்கு சென்றார். சலவை தொழிலாளியை பார்த்து சொன்னார், இந்த ஊரிலெல்லாம் சோப்பும் இல்லை சலவை தொழிலாளியும் இல்லையென்று. சலவை தொழிலாளி அவரை வியப்போடு பார்த்து கேட்டான் ஏன்? என்ன ஆயிற்று, நான் இந்த ஊரிலேயே மிகவும் பிரசித்து பெற்ற சலவை தொழிலாளி. நான் சலவை செய்த துணிகளை பாருங்கள் எவ்வளவு வெண்மையாய் இருக்கிறது என்று ஒவ்வொன்றாய் அவரிடம் காண்பித்தான். அந்த நபர் வயதான முதியவரை காண்பித்து, அப்படியானால் இந்த முதியவரின் துணிகள் ஏன் இவ்வளவு அழுக்கடைந்து இருக்கிறது என்று கேட்டார்.
சலவை தொழிலாளி அவரை பார்த்து சொன்னான், அவர்கள் தங்களது அழுக்கு துணிகளை என்னிடம் கொண்டு வருவதில்லை, அப்படியிருக்க நான் எப்படி அவர்கள் துணிகளை சலவை செய்து சுத்தபடுத்த முடியும்? என்று கேட்டான். அப்போது அவர் மெதுவாக அவரிடம் சொன்னார் அதுபோல இயேசுவும் இருக்கிறார், அவருடைய இரத்தமும் மனுக்குலத்தை மீட்க்க வல்லமை உள்ளதாய் இருக்கிறது. ஆனால் அழுக்கு வஸ்திரம் தரித்திருக்கிற முதியவரைப் போல நாமும் நம்முடைய பாவமும், சாபமும் கழுவி நம்மை பரிசுத்த படுத்த வல்லவராகிய இயேசுவிடம் வராததே காரணமென்று .
அருமை நண்பர்களே நாம் இயேசுவிடம் கடந்து வருவோம். அவர் நம்மை பாவம், சாபம், வறுமை, சமாதானமின்மை, மரண பயம் போன்ற அடிமைத்தனத்திலிருண்டு மீட்டு இன்றைக்கே, இப்போதே இரட்சிப்பார்.
I யோவான் 1:7 அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment