இயேசுவுக்கே மகிமை
கீலேயாத்தின் பிசின் தைலம்
எரேமியா 8:22 கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?
கீலேயாத் மலையில் ஒரு விதமான மரம் உள்ளது, அந்த மரத்தை கூரிய கற்களாலோ அல்லது கத்திகளாலோ குத்தி சிதைக்கும் போது அந்த மரத்திலிருந்து சிவப்பு நிறமான பிசின் வடியும், அது காயங்களையும், ரணத்தையும் ஆற்ற வல்லமையுள்ளது.
அந்த மரத்தின் பிசின் தைலத்துக்கு மனிதனுடைய வெளிப்புற காயங்களை மட்டுமே குணமாக்க முடியும். ஆனால் கீலேயாத்தின் அந்த மரத்தை காட்டிலும் விஷேசித்த ஒரு பச்சை மரம் நமக்கு உண்டு. [லூக்கா 23:31 பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.] ஆம் அவர் தான் நமது அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவரை ஆணிகளால் அடித்தார்கள், சாட்டை வாரினால் அவரது முதுகை ஒரு வயல் நிலத்தை உழுவது போல கிழித்தார்கள். பொற்கிரீடம் சூட்டப்பட வேண்டிய சிரசினிலே முட்கிரீடம் சூடினார்கள். அப்போது அவருடைய சரீரத்திலிருந்து வடிந்த அந்த ரத்தம் மனிதனுடைய வெளிக்காயங்களை மட்டுமல்ல உள் காயங்களையும் ஆற்ற வல்லமையுள்ளது. மட்டுமல்ல நொறுங்குண்டு போன இதயத்தின் காயங்களையும் ஆற்ற வல்லமையுள்ளது.
சங்கீதம் 147:3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
அவருடைய விலையேறப் பெற்ற ரத்தத்தினால் நமக்கு பாவ மன்னிப்பும் கிடைத்தது. இயேசுவின் ரத்ததினாலேயே அன்றி பாவமன்னிப்புக்கு வேறு ஒரு வழியே இல்லை.
சங்கீதம் 103 : 3. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,
I பேதுரு 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment