இயேசுவுக்கே மகிமை
அனலாயாவது குளிராயாவது
வெளி 3:15 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
குளிர் அல்லது அனலுக்கு ஒரு விஷேசித்த குணம் உள்ளது. அதாவது குளிர் அதிகமாய் இருந்தால் அந்த இடத்தில் கிருமிகள் நெருங்காது. கடும் குளிர் கிருமிகளை அழிக்க வல்லது. நாம் அனுதினமும் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டி இப்படிதான் பொருட்களை பாதுகாக்கிறது. அதுபோலவே அனலுக்கும் ஒரு வல்லமை உண்டு. தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அந்த அனல் அதிகமாகும் போது வைரஸ்கள் அல்லது கிருமிகள் செத்துபோகிறது.
குளிருக்கும் அனலுக்கும் இடைப்பட்ட பகுதிதான் வெதுவெதுப்பு. இந்த வெதுவெதுப்பான நிலையில் கிருமிகளை அழிக்க முடியாது.
இதுபோலவே நம்முடைய ஆவிக்குரிய நிலையில் நாம் குளிராயாவது அல்லது அனலாயாவது இருந்தால் பிசாசினுடைய வல்லமையை அழிக்கலாம். வெதுவெதுப்பான நிலையில் இருந்தால் நாம் பரிதாபதிற்குள்ளானவர்கள். காரணம் நாம் கிறிஸ்துவுக்காய் வாழ்ந்து விடுவோம் என்று பிசாசு நினைத்து அவன் நமக்கு எதிராய் போராடுவான். அதே வேளையில் நாம் அரை குறை பரிசுத்தம் என்ற வெதுவெதுப்பான நிலையில் இருப்பதால் தேவனும் நமக்கு உதவி செய்ய முடியாது. இப்போது நாம் பலவிதமான போராட்டங்களை அனுபவிப்போம். கடைசியாக கிறிஸ்தவ வாழ்க்கையே இப்படிதான் என்று மனம் சலித்து போகிறோம்.
வெளி 3:16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
இப்படிப்பட்டவர்களை என் வாயிலிருந்து வாந்தி பண்ணி போடுவேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார். இது மிகவும் கொடுமையானது. இந்த வார்த்தை (வாந்தி) இங்கு பயன்படுத்த காரணம், வாந்தி பண்ணியதை நாயை தவிர வேறொரு ஜீவா ராசியும் திரும்ப அதை எடுக்காது அல்லது சாப்பிடாது. அதுபோல ஒரு மனிதனை தேவன் வாந்தி பண்ணி போடுவாரானால் அல்லது அவனை கைவிடுவாரானால் திரும்ப அவனை தேவன் ஏற்று கொள்வது கடினம்.
எனவே தேவனுடைய கிருபையின் வட்டத்தை விட்டு வெளியே வராத படி நாம் ஜாக்கிரதையாய் இருப்போம். தேவன் நம்மை கைவிடாதிருப்பாராக.
குறிப்பு : விறகு ஒன்று தீ இலாமல் அணைந்த நிலையில் இருக்கும்போது அதன்மேல் ஒரு ஈ எளிதாக அமர்ந்துவிடலாம்.ஆனால் தீ நல்ல அனலுடன் எரிந்துகொண்டிருந்தால் அதன் மேல் அந்த ஈ அமர முடியாது. மட்டுமல்ல தீ இன்னும் அதிக ஜுவலையுடனும் அதிக அனலுடனும் எரிந்தால் அந்த ஈ ஆனது அந்த விறகினுடைய பக்கத்தில் கூட நெருங்க முடியாது. அதுபோலவே நாமும் தேவனை ஆராதித்து, பரிசுத்தமாய் வாழ்ந்து தேவனுடைய அக்னி அபிஷேகத்தை காத்து கொள்வோமால் பிசாசு நம்மை நெருங்கவே முடியாது.
கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment