Wednesday, March 10, 2010

மணவாட்டியே வா

இயேசுவுக்கே மகிமை

மணவாட்டியே வா

ஆதியாகமம் 3:24 அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.

மனிதன் பாவம் செய்தபோது தேவன் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார். மாத்திரமல்ல அவர் மனிதனை படைத்தற்காக மனஸ்தாபபட்டார்.

ஆதியாகமம் 6:6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.

ஆனாலும் அவருடைய இரக்கம் மிகப்பெரியதாய் இருப்பதால் தன்னுடைய சாயலில் உருவாக்கப்பட்ட தன்னுடைய பிள்ளைகளை அப்படியே விட்டுவிட அவர் விரும்பவில்லை.

ஓசியா 11:8 எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.

தான் இழந்துபோன மனுக்குலத்தை மீட்க எவ்வளவு பெரிய விலை கிரயம் செலுத்தவும் முன் வந்தார்.

சிறுவன் ஒருவன் சில புறாக்களை பிடித்து கொண்டு போவதை முதியவர் ஒருவர் கவனித்தார். அவனிடம் தம்பி நீ இவைகளை கொண்டு போய் என்ன செய்வாய்? என்று கேட்டார். அவன் அவரை பார்த்து சொன்னான், அய்யா நான் இவைகளின் சிறகுகளை ஒடித்து பூனைக்கு போடுவேன். அது கடித்து இவைகளை கொஞ்சம், கொஞ்சமாய் கொல்லுவதை நான் வேடிக்கை பார்ப்பேன் என்றான். உடனடியாக அந்த முதியவர் அவைகளின் மீது மனதுருகி, இவைகளை விட்டு விடு, அவைகள் சுதந்திரமாக பறந்து செல்லட்டும் அதற்கு ஈடாக நான் உனக்கு என்ன தரவேண்டும்? என்று கேட்டார். சிறுவனும் குறிப்பிட்ட ஒரு தொகையை கேட்டான், முதியவரும் அதை ஒப்புக்கொண்டு கொடுக்க அந்த புறாக்கள் விடுதலையாக்கபட்டு சுதந்திரமாக பறந்து சென்றன.

ஆம் அருமை நண்பர்களே அப்படிதான் பிசாசும் மனிதர்களை பிடித்து பாவத்திற்கும், சாபத்திற்கும் அடிமை படுத்தி ஜீவ காலமெல்லாம் மரணபயத்தினாலே வாதித்து வேடிக்கை பார்த்துகொண்டிருந்தான். இதை பார்த்த பிதாவாகிய தேவன் மனுக்குலத்தின் மேல் மனதுருகி அவனை விடுதலையாக்க, பிசாசிடம் நான் உனக்கு என்ன தரவேண்டும்? என்று கேட்டார். சற்றும் யோசிக்காத பிசாசு உம்முடைய செல்ல குமாரன் இயேசுவின் ஜீவனை தந்தால் இவர்களை நான் விட்டுவிடலாம் என சொன்னான். வேறு வழியில்லை என்பதை அறிந்த தேவன் தன் மடியில் தவழ்ந்து கொண்டிருந்த தன் செல்ல குமாரன் இயேசுவை ஒப்புகொடுத்தார்.

பிசாசும் தன்னுடைய கோபம் முழுவதையும் அவரின் மீது திருப்பினான். அவரை சித்திரவதை செய்தான். அவருடைய ஜீவனாகிய ரத்தம் முழுவதும் தனக்கு வேண்டும் என்பதால் கடைசியில் இருந்த அந்த ஒரே ஒரு சொட்டு ரத்தத்தையும் விட்டு விட மனதில்லாமல் ஈட்டியால் குத்தும்படி த்ன்னுடயவர்களை ஏவி விட்டான். ஆம் இயேசு தன்னுடைய கடைசி சொட்டு ரத்தத்தையும் சிந்தி பிசாசுக்கு கிரயமாக செலுத்தி நம்மை மீட்டு கொண்டார்.

வேதத்தின் முதல் புத்தகமாகிய ஆதியாகமதிலே தான் துரத்திவிட்ட மனிதனை ஆண்டவர் வேதத்தின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேசத்தில் என் பிள்ளையே வா என்று தன் இரு கரத்தை நீட்டி அழைக்கிறார்.

வெளி 22:17 ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.

நண்பர்களே நாமும் பாவத்தினிமித்தம் துரத்தப்பட்டிருந்தால் இன்று ஆண்டவர் இயேசு காயப்பட்ட தன் இரு கரம் நீட்டி என் பிள்ளையே என்னிடம் திரும்பி வா என்று ஆவலாய் நம்மை அழைக்கிறார்.

உருகாயோ என் நெஞ்சே கல்வாரி காட்சியை கண்டபின்பும்?

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment