இயேசுவுக்கே மகிமை
மோசேயிலும் பெரியவர்
யாத்திராகமம் 17 : 11. மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.
12. மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.
என்னுடைய வாழ்கையில் வந்த தாங்க முடியாத தோல்விகள், என்னுடைய மேன்மையாக நான் கருதிய ஒன்றை நான் இழந்த போது நான் அடைந்த வேதனையின் உச்ச கட்டத்தின் போது அநேக நேரங்களில் நான் மோசேயை நினைத்திருக்கிறேன். அதாவது மோசேயினுடைய கைகள் உயர்த்தப் பட்டபோது அவனுக்கு ஜெயம் கிடைத்தது. இப்படி இந்நாட்களிலும் யாராகிலும் இருந்திருந்தால் நான் போய் எனக்கு ஜெயம் உண்டாகும்படி உதவி கேட்டிருக்கலாமே என்று.
அப்பொழுது ஒரு நாள் எனக்கு உணர்த்தப்பட்டது என்னவென்றால் மோசேயிலும் பெரியவர் நமக்கு உண்டு என்று. யார் அவர்? ஆம் அவர் தான் நம்மை நேசிக்கிறவரும், நாம் நேசிக்கிறவருமாகிய நமது அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து. ஏன் அவர் மோசேயிலும் பெரியவர்?
மோசேயினுடைய கைகள் உயர்த்தப்பட்டபோது ஜெயம் கிடைத்தது. ஆனால் நேரம் செல்ல, செல்ல அவனுடைய கைகள் தளர்ந்து போனது, அப்பொழுது அவனுடைய கைகள் கீழே இறங்கியது, தோல்வி ஏற்ப்பட்டது, ஆகவே அவனுடைய கைகளை ஊரும், ஆரோனும் தாங்கி பிடித்தனர்.
அதுபோலவே நமக்கு ஜெயம் கிடைக்கும் படி ஆண்டவராகிய இயேசு, கல்வாரி சிலுவையில் தம்முடைய கரத்தை உயர்த்த வேண்டியதாயிற்று. சுமார் ஆறு மணி நேரம் சிலுவையில் தொங்கினார், அந்த ஆறு மணி நேரமும் அவர் கரங்களை உயர்த்த வேண்டியிருந்தது. நிச்சயமாக கரங்கள் சோந்து போகும், ஆனால் அவருடனிருந்த சீஷர்கள் பயந்து போய் அவரை தனிமையாய் விட்டு விட்டார்கள். அவருடைய கரத்தை தாங்கி பிடிக்க யாருமில்லை, எனவே சிலுவையிலே உயர்த்திய இரண்டு கரங்களும் சோர்ந்து கீழே இறங்காதபடி இருக்க தன் இரண்டு கரங்களையும் ஆணிகளால் அடித்து நிலை நிறுத்த ஒப்புக்கொடுத்தார்.
தாயிலும் மேலான அன்பு :
ஏசாயா 26:20 என் ஜனமே, நீ போய் உன் அறைக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.
தாய் கோழியானது பருந்துகள் வரும்போது ஒரு விதமான சத்தம் எழுப்பிக் கொண்டு தன் இரண்டு ரக்கைகளையும் உயர்த்தி தன் குஞ்சுகளுக்கு அடைக்கலம் கொடுக்கும், குஞ்சுகளும் அதனுள் ஓடி ஒளிந்து கொள்ளும். அது போலவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு தாய் கோழியை போல தன் இரண்டு கைகளையும் உயர்த்தி தன் சிறகுகளின் கீழே அடைக்கலமாய் வரும்படி ஆவலாய் நம்மை அழைக்கிறார்.
ஏசாயா 49:15 ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
தாயினுடைய அன்பு மிகவும் விசேஷித்தது. ஒரு கூலிவேலை செய்யும் தாய், தன்னுடைய வேலையை முடித்து வந்து, தன்னுடைய சிறு குழந்தையுடன், களைப்போடு கூட ரயில் நிலையத்துக்கு வெளியே அயர்ந்து நித்திரை செய்து கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக சில ரயில்கள் மிகுந்த சத்தத்துடன் கடந்து சென்றன. அந்த தாயை அந்த சத்தம் தட்டியெழுப்ப முடியவில்லை. சற்று நேரம் சென்றது, பலத்த சத்தத்துடன் இடி, இடித்தது. அதுவும் அவள் தூக்கத்தை கலைக்க முடியவில்லை, அவ்வளவு களைப்பு. ஆனால் சற்று நேரம் சென்று தன் பச்சிளம் குழந்தை தூக்கத்தை விட்டு எழுந்து லேசாக அழ ஆரம்பித்தது, அவ்வளவு தான் தாமதம் ரயிலின் ஓசைக்கும், இடி முழக்கத்துக்கும் எழும்பாத தாய், அந்த லேசான அழு குரலுக்கு எழுந்து தன் குழந்தையை மார்போடு கூட அனைத்துக் கொண்டாள். அது தான் ஒரு தாயினுடைய அன்பு. ஆனால் ஆண்டவருடைய அன்பு தாயினுடைய அன்பை காட்டிலும் மிகவும் விசேஷித்தது.
மத்தேயு 23:37 கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
தாய் கோழி ஒன்று தன் குஞ்சுகளோடு, காட்டில் இரை மேய்ந்து கொண்டிருந்தது. திடீரென காட்டுத் தீ நான்கு பக்கமும் பரவியது. தாய் கோழி தீயிலிருந்து தப்ப எவ்வளவோ முயற்சித்தது, முடியவில்லை. வேறு வழியில்லை, தாய் கோழி தன் இரண்டு சிறகுகளையும் உயர்த்தியது, குஞ்சுகள் அதன் செட்டையின் கீழ் அடைக்கலம் புகுந்தது. தாய் கோழி தன் சிறகினுள் குஞ்சுகளை வைத்து அப்படியே அமர்ந்து விட்டது. சற்று நேரமானது, தீயானது அப்படியே அந்த தாய் கோழியை எரித்து கொன்று போட்டது. திடீரென மழை பெய்யவே, அந்த காட்டு தீ அணைந்து போனது. மறு நாள் வேடன் ஒருவன் அந்த வழியே வந்தான். கருகிய நிலையில் செத்து போயிருந்த தாய் கோழியை பார்த்தான், தன் கையிலிருந்த கம்பால் அதை குத்தி அப்புறப்படுத்த முயன்ற போது, சிறகினுள் இருந்த குஞ்சுகள் உயிரோடிருந்த படியால் அவைகள் மகிழ்ச்சியாய், வெளியே வந்தன.
ஆம் பிரியமானவர்களே இயேசுவும் அப்படிதான், ஒரு தாய் கோழியை போல நம்மை உயிரோடு பாதுகாக்கும் படி தன் இரண்டு கரத்தையும் ஒரு தாய் பறவையின் சிறகை போல உயர்த்தி காண்பித்து, சிலுவையிலே அவர் நமக்காக மரித்தார். அவருடைய சிறகின் கீழ் அடைக்கலம் புகுந்த நாமோ இன்றும் உயிரோடிருக்கிறோம்.
மோசே தன் கைகளை உயர்த்திய போது அன்று ஒருநாள் மட்டுமே ஜெயம் கிடைத்தது. அகாஸ்வேரு ராஜா தன் பொற் செங்கோலை நீட்டிய போது, அதின் நுனியை பிடித்த எஸ்தர் காப்பாற்றப்பட்டாள். ஆனால் இவர்கள் எலாரிலும் பெரியவர் இயேசுவினுடைய பொற்கரம் நமக்கு உண்டு. அவருடைய கரத்தை நாம் பிடித்தால் இன்றைக்கும் நமக்கு ஜெயம் உண்டு.
கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.