Saturday, May 29, 2010

லேட்டா வந்தாலும் லாட்டா வரும்

இயேசுவுக்கே மகிமை

லேட்டா வந்தாலும் லாட்டா வரும்

சங்கீதம் 90:15 தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும், சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.

அடுக்கடுக்காய் ஆசீர்வாதங்கள் வந்தால்தான், ஒருவனை தேவன் நேசிக்கிறார் என்று அர்த்தமல்ல. ஒருவேளை ஆசீர்வாதங்கள் ஒரு சிலருக்கு தாமதித்தால் அவர்கள் விசுவாசத்தில் குறைந்தவர்கள் என்று கருதுவது, எல்லா இடங்களிலும் சரியாகாது. ஒரு சிலரை தேவன் உபத்திரவத்தின் பாதையில் நடத்தி நாம் நினைக்கிறதற்கும், வேண்டிகொள்கிறதற்கும் அதிகமாய் நம்மை ஆசீர்வதிப்பார். ஒரு மனிதன் தேவனுக்காய் காத்திருப்பானேயானால் ஒரு போதும் தேவன் அவனை வெட்க்கப்படுத்தமாட்டார்.

சங்கீதம் 34:5 அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.

ஒரு சில நேரங்களில் ஆசீர்வாதங்கள் எளிதாய் கிடைத்தால், அதில் அநேகர் இடறிப்போய்விடுகின்றனர், அந்த ஆசீர்வாதத்தின் அருமை நமக்குபுரிவதில்லை. எனவே அநேகர் கிடைத்த ஆசீர்வாதத்தை குடித்து, வெறித்து அழித்துவிடுகின்றனர்.

நீதிமொழிகள் 20:21 ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.

தேவன் தம்மை சார்ந்து கொள்ளுகிறவர்களை ஆசீர்வதிக்கும் படிகள், முதலாவது பூரண ஆசீர்வாதம். இது நம்முடைய தேவைகள் சந்திக்கப்படும் ஆசீர்வாதம். இரண்டாவது சம்பூரண ஆசீர்வாதம், இது நம்முடைய தேவைக்கும் அதிகமானது. மூன்றாவது பரிபூரண ஆசீர்வாதம். இது நிரம்பி வழியும் ஆசீர்வாதம், நம்முடைய தேவைக்கு அதிகமாகவும், பிறருக்கு மனமுவந்து கொடுக்குமளவு.

ஆகவே தான் பரிசுத்த வேதம் நமக்கு சொல்லுகிறது,

சங்கீதம் 113:

7. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.

8.
அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.

முதலாவது ஆண்டவர் நம்மை சிறுமையிலிருந்து தூக்கிஎடுக்கிறார், இரண்டாவது அவர் நம்மை உயர்த்துகிறார், மூன்றாவது அவர் நம்மை உட்காரப்பண்ணுகிறார்.

முதலாவது யோசேப்பை குழியிலிருந்து தூக்கியெடுத்து போத்திப்பாரினுடைய வீட்டில் வேலைக்காரனாய் வைக்கிறார். இரண்டாவது அவர் அவனை அங்கிருந்து சிறைச்சாலைக்கு விசாரிப்புக்காரனாய் உயர்த்துகிறார். மூன்றாவது அவனை அங்கிருந்து முழு எகிப்தினுடைய சிங்காசத்தில் உட்க்காரப்பண்ணினார் அல்லது அமரப்பண்ணினார். அங்கு யோசேப்பு எகிப்தின் ஜனத்தின் அதிபதியோடும், ஜனத்தின் பிரபுக்களோடும் உட்கார்ந்தான்.

இந்த மேன்மையான உயர்வை அவன் பெற மிக நீண்ட நாட்களாகிய பதிமூன்று வருடங்கள் அவன் காத்திருந்தான். ஆனால் அவனுடைய கர்த்தராகிய தேவன் அவனை வெட்கப்படுத்தவில்லை. அதுபோல ஆபிரகாம் மிக நீண்ட நாட்களாகிய இருபத்து ஐந்து வருடங்கள் ஒரே ஒரு குழந்தைக்காக காத்திருந்தான். ஆனால் இஸ்ரேல என்னும் ஒரு தேசத்திற்கே தகப்பனான்.

விவசாயி ஒருவன் தன்னுடைய நிலத்தில் பெரணி செடியினுடைய விதையையும், மூங்கில் செடியினுடைய விதையையும் விதைத்தார். பெரணி விதையானது சிலவாரங்களில் முளைத்து செழித்து வளர்ந்தது. ஆனால் மூங்கில் விதையிலிருந்து எந்த ஒரு முளையும் தோன்றவில்லை. தோட்டக்காரன் இரண்டாம், மூன்றாம், நான்காம் வருடமும் போய் பார்த்தான். மூங்கில் விதைத்த இடத்தில் எந்த முளையையும் பார்க்க முடியவில்லை. ஆனாலும் தோட்டக்காரன் சோர்ந்து போகாமல் தண்ணீர் பாய்ச்சினான். ஐந்தாவது வருடம் தோட்டக்காரன் போய் பார்த்தபோது மூங்கில் விதைகளிலிருந்து சிறு முளை வெளிவந்திருந்தது. சுமார் ஆறுமாதங்கள் கழித்து தோட்டக்காரன் போய், பெரணி செடியையும், பெரணி செடியையும் பார்த்தான். பெரணி செடியின் ஐந்து வருட வளர்ச்சி நான்கு அல்லது ஐந்து அடி மட்டுமே இருந்தது. ஆனால் மூங்கிலின் ஆறு மாத வளர்ச்சி முப்பது முதல் நாற்ப்பது அடியாய் இருந்தது.

ஆம் பிரியமான நண்பர்களே ஆசீர்வாதங்கள் சற்று தாமதமாய் வந்தாலும், நாம் முறுமுறுக்காமல், தேவனை உறுதியாய் பற்றிக்கொண்டால் தேவன் நாம் துன்பத்தை கண்ட வருஷங்களுக்கு தக்கதாய் தேவன் நம்மை பலமடங்கு ஆசீர்வதிப்பார்.

ஆசீர்வாதங்கள் Late ஆ வந்தாலும், தேவன் நமக்கு Lot ஆ தருவார்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

வாழ்க்கை சுவையுள்ளதாய் மாற

இயேசுவுக்கே மகிமை

வாழ்க்கை சுவையுள்ளதாய் மாற

இன்று அநேகருடைய வாழ்க்கை தோல்விகளால் நிறைந்திருப்பதால் வாழ்க்கை சுவையற்றதாய் மாறிவிடுகிறது. இதனால் வாழ்க்கை வெறுத்துப்போகிறது.

தண்ணீருக்கு சுவையில்லை, நிறமில்லை, வாசனையுமில்லை. ஒரு நாள் இந்த தண்ணீர் சுவை, நிறம், வாசனை உள்ளதாய் மாறினது. அது எங்கே, எப்போது தெரியுமா?

ஆண்டவராகிய இயேசு கானாவூர் என்னுமிடத்தில் நடந்த திருமணத்திற்கு அவருடைய தாயாருடன் கடந்து சென்றார். திடீரென அங்கு திராட்சை ரசம் குறைவுபட்டது. எல்லாரும் குறைவை நினைத்து கலங்கி நின்ற போது, இயேசுவின் தாய், இயேசுவிடம் சென்று அந்த குறைவை அவருக்கு தெரிவித்தார்கள்.

இயேசுவோ அங்கிருந்த கற்சாடிகளை தண்ணீரால் நிரப்பும்படி கட்டளையிட்டார். அப்படியே அவர்களும் செய்ய, அந்த சாதாரண தண்ணீரை மொண்டு பந்தி விசாரிப்புகாரனிடம் கொண்டுபோக சொன்னார். அதை ருசிபார்த்த பந்தி விசாரிப்புக்காரன் கீழ் கண்டவாறு மணவாளனிடம் கூறினான்.

யோவான் 2:

9. அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:

10.
எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.

பிரியமானவர்களே இயேசு அந்த தண்ணீரை பார்த்து நீ திராட்சை ரசமாய் மாறுவாயாக என்று கட்டளையிடவில்லை, அல்லது அவர் வேறு ஏதோ ஒன்றை செய்யவில்லை. ஆனால் அந்த நிறம், சுவை, வாசனையற்ற தண்ணீர் நிறம், சுவை, வாசனையுள்ள திராட்சை ரசமாய் மாறிற்று. அங்கு என்ன நடந்திருக்கும்? அந்த தண்ணீர் அன்று யூத பாரம்பரிய படி பாதங்களை கழுவுவதற்காக, வெளியே சாதாரண கற்சாடிகளில் வைக்கப்பட்டிருந்தது. இவைகளை யாரும் மதிக்கவோ, வந்தனம் செய்யவோ மாட்டார்கள். ஆனால் இந்த சாதாரன தண்ணீரின் அருகில் சர்வ வல்லமையுள்ள தேவன், சிருஷ்டிகர்த்தா, பதினாயிரன்களுள் சிறந்தவர் இயேசு வந்து நின்றவுடன் அந்த தண்ணீருக்கு தாங்க முடியாத சந்தோசம், அது தனக்குள்ளே பூரித்து மகிழ்ந்து, அந்த மகிழ்ச்சியிலே அது சுவையுள்ள ரசமாய் மாறினது.

ஆம் பிரியமானவர்களே நாமும் வாழ்கையில் குறைவுள்ளவர்களாய் இருக்கிறோமா ? தேவையுள்ளவர்களாய் இருக்கிறோமா ? அந்த கற்சாடிகளை போல மற்றவர்களால் புறக்கணிக்கபட்டிருக்கிறோமா? வாழ்க்கை தண்ணீரை போல சுவையற்றிருக்கிறதா? அன்று மரியாள் இயேசுவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது போல, உங்களுக்கு பரிகாரியாகிய கர்த்தரை, பரம வைத்தியராம் இயேசுவை அறிமுகப்படுத்துகிறோம். அன்று அங்கு இயேசு முதலாம் அற்புதத்தை செய்தார். இன்று நாமும் இந்த இயேசுவை ஏற்று கொண்டால் நம்முடைய வாழ்கையில் முதலாம் அற்புதத்தை துவங்க இயேசு ஆவலுள்ளவராய் காத்து நிற்கிறார். மாத்திரமல்ல முந்தின ரசத்தை பார்க்கிலும் பிந்தின அந்த ரசம் சுவையுள்ளதாய் இருந்தது போல நம்முடைய பழைய வாழ்க்கையை விட புதிய வாழ்க்கை சிறந்ததாய் இருக்கும். இயேசு நம் அருகில் வந்தால் மாத்திரம் போதும், மரித்த சரீரமாய் இருதாலும் அவர் பிரசன்னத்தால், நமக்குள் ஏற்படும் பூரிப்பினால் அது உயிரடைந்து விடும். பழைய சுவை, நிறம், வாசனையற்ற நிலைமை மாறி வாழ்க்கை சுவை, நிறம், வாசனையுள்ளதாய் மாறி விடும். சுவையுள்ள திராட்சை ரசத்தை தேடி அநேகர் வருவது போல நம் தயவை நாடி அநேகர் நம்மை தேடி வருவார்கள்.

மாற்கு 10:27 இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

எரேமியா 32:27 இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?

நம்முடைய வாழ்க்கை கேள்விக்குறியை போல இருந்தாலும், அதாவது கேள்விக்குறி (?) பொதுவாகவே கொக்கி போல வளைந்து இருக்கும், அதுபோல தலைகுனிந்த வாழ்க்கையாய் இருந்தாலும், நாம் இயேசுவிடம் வரும் போது அவர் நம்முடைய வாழ்க்கையை ஆச்சர்ய குறி போல மாற்றுவார். ஆச்சர்ய குறி பொதுவாகவே நிமிர்ந்து (!) நிற்கும். அதுபோலவே நம்முடைய வாழ்க்கையை ஆண்டவர் தலை நிமிர்ந்து நிற்க பண்ணுவார்.

லேவியராகமம் 26:13 நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.


கிறிஸ்த்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

எரிச்சல் ஏற்படுவது ஏன்?

இயேசுவுக்கே மகிமை

எரிச்சல் ஏற்படுவது ஏன்?

ஆதியாகமம் 4:6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?

ஒரு மனிதன் செலுத்தும் காணிக்கைகளை அல்லது அவன் செல்லுத்தும் ஆராதனையை அல்லது ஜெபத்தை தேவன் அங்கீகரிக்காதபோது, அந்த மனிதனுக்குள் எரிச்சல் ஏற்படுகிறது. உதாரணமாக நாம் தேவ சமுகத்தில் ஜெபிக்கும் போது அந்த ஜெபத்தை தேவன் அங்கிகரிக்காத போது அந்த ஜெபம் திரும்ப நம்முடைய மடியிலே வருகிறது. அப்போது எரிச்சல் உண்டாகிறது.

ஆதியாகமம் 4:5 காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.

சங்கீதம் 35:13 நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது.

ஒரு மனிதன் தன் ஜெப அறையிலிருந்து வரும்போது, சந்தோஷமாய், புன்சிரிப்போடு வந்தால் நாம் உடனடியாக புரிந்து கொள்ளலாம், தேவன் அவர்கள் ஜெபத்தை அங்கீகரித்துள்ளார் என்றும் தேவனுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு சரியாக உள்ளது என்றும். மாறாக அவர்கள் துக்கத்தோடும் அல்லது சிறு காரியங்களுக்கும் அவர்களுக்கு எரிச்சல் உண்டாகி, அவர்கள் முகத்தை சுருக்கி முகநாடி வேறுபட்டிருந்தால் அவர்கள் ஜெபம், அல்லது ஆராதனை அல்லது காணிக்கையை தேவன் அங்கீகரிக்கவில்லை என்பதையும் அவர்களுக்கும் தேவனுக்கும் உள்ள உறவு சீராயில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

மேலும் தேவன் அவரது பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் போது, அவர்களுடைய சத்துருக்களுக்கு தானாகவே எரிச்சல் ஏற்படுவது வழக்கம். ஆகவே தேவ பிள்ளைகள் தேவன் தங்களை ஆசீர்வதிக்கும்போது புது வீடு கட்டும்போது, அல்லது புதிய கார் வாங்கும் போது அல்லது ஏதோ ஒரு ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும் போது ஜாக்கிரதையாய் இருந்து தங்களையும், தங்கள் உடமைகளையும் இயேசுவின் இரத்தத்திற்குள் மறைத்து பாதுகாக்க பழகிக்கொள்ள வேண்டும்.

யாத்திராகமம் 1:12 ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.

எபேசியர் 4:26 நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

யோசேப்பு அடிமையா?

இயேசுவுக்கே மகிமை

யோசேப்பு அடிமையா?

I கொரிந்தியர் 6:12 எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.

ஒரு மனிதன் வாழ்க்கையில் நெருக்கபடுகையில் அவன் அறிந்திருக்க வேண்டிய ஒன்று அது சாபத்தினிமித்தம் வந்ததா? இல்லை அது தேவன் நம்மை பரிசுத்தப்படுத்தி ஆசீர்வதிக்கும்படி அவர் நடத்தும் பாதையா? என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும்.

அநேகர் சாபத்தின் பிடியில் இருந்து கொண்டு யோசப்பை போல தேவன் தங்களை நடத்துவதாக நினைக்கலாம். ஆனால் சாபத்தினால் வரும் அடிமைத்தனத்திற்கும், தேவன் நடத்தும் பாதைக்கும் வித்தியாசம் உண்டு. தேவன் யோசேப்பை உன்னதமான ஒரு நிலைக்கு உயர்த்தும் படி அவனை புடமிட்டார். அவன் அடிமையாக விற்கப்பட்டது உண்மை. ஆனால் தேவன் அவனை அடிமையாக வைக்கவில்லை. அவன் போத்திப்பாரினுடைய வீட்டில் எல்லாவற்றையும் விசாரிக்கிற ஒரு அதிகாரமுள்ள பொறுப்பிலிருந்தான், அங்கு அடிமையாய் இருக்கவில்லை. அடுத்தது சிறைச்சாலைக்கு சென்றான், அங்கும் தலைமை விசாரிப்புக்காரனாய் இருந்தான், அங்கும் தேவன் அவனை அடிமையாய் வைக்கவில்லை. அங்கிருந்து முழு எகிப்திற்கும் அதிகாரியாய் சிங்காசனத்திற்கு உயர்தப்பட்டான். இந்த உன்னத நிலையை அடைய தேவன் நியமித்த பாதை தான் அதற்கு முந்தய சில பாடுகளின் பாதைகள். (போத்திப்பாரின் மனைவியால் பொய் குற்றம் சாட்டப்பட்டது, சகோதரர்களால் கிணற்றில் வீசப்பட்டது, சொந்த தேசத்தை விட்டு அடிமையாய் விற்கப்பட்டது.)

பிசாசு ஒரு மனிதனை அடிமை படுத்த சிலதந்திரங்களை கையாளுகிறான். இதினிமித்தம் மனிதர்களின் சமாதானத்தை கெடுத்து, அவர்களை மரணத்திற்கு நேராய் அல்லது வாழ்கையை வெறுக்கப்பண்ணுகிறான். இதற்காக அவன் சில காரியங்களுக்கு நம்மை அடிமை படுத்துகிறான். அவைகள்,

1. கடன்வாகும் படி நம்மை தூண்டி கடனுக்கு அடிமைப்படுத்துகிறான் (கிரடிட் காடும் பொருந்தும்). எனவே நாம் கடனுக்கு அடிமையாகாத படி நம்மை காத்துக்கொள்வோம்.

நீதிமொழிகள் 22:7 ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.

2. பாவத்திற்கு நம்மை தூண்டி, இச்சைகளுக்கு அடிமைபடுத்தி பலவித நோய்களுக்கு நம்மை உட்படுத்துகிறான். எனவே பாவத்திற்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

யோவான் 8:34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

3. மதுபானத்திற்கு அடிமையாகாதிருப்போம்.

தீத்து 2:3 முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக் கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாத வர்களுமாயிருக்கவும்,

4. காதல் போன்றவற்றிக்கு நம்மை அடிமைப்படுத்தி, கடைசியில் தோல்வியை உண்டுபண்ணி தற்கொலைக்கு நேராய் நம்மை வழிநடத்துவான். எனவே எந்த ஒரு மனிதனுக்கும் அடிமையாகாத படி நம்மை காத்துக்கொள்வோம்.

I கொரிந்தியர் 7:23 நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.

எரேமியா 30:8 அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமை கொள்வதில்லை.

ஆகவே நாம் தேவனுக்கு நம்மை அடிமைகளாக ஒப்புக்கொடுப்போம். இதினிமித்தம் நாம் பரிசுத்தமாய் வாழ்ந்து, பல ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளலாம். இயேசுவின் தாய் மரியாள் தன்னை தேவனுக்கு அடிமையாக ஒப்புக கொடுத்ததினிமித்தம் எல்லா சந்ததிகளும் அவர்களை பாக்கியவதி என்று அழைக்கும் சிறப்பை பெற்றார்கள்.

லூக்கா 1:48 அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.

ரோமர் 6:18 பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.

ரோமர் 6:22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.


கிறிஸ்த்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

இயேசுவை அறிந்து கொள்வோம்

இயேசுவுக்கே மகிமை

இயேசுவை அறிந்து கொள்வோம்

யாத்திராகமம் 33 : 13. உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான்.

இன்று அநேகர் இயேசுவை ஒரு கோழையாக கருதுகின்றனர். காரணம் அவர் அன்பையும், சாந்த குணத்தையும், மனத்தாழ்மையையும் போதிக்கிறபடியாலும், சத்துருவை சினேகிக்கவும், மன்னிக்கவும் சொல்லுகிறபடியாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத, வலிமையில்லாத ஒரு கடவுள் என்று கருதுகின்றனர். அதைப்போலவே கிறிஸ்த்தவர்களையும் அநேகர் கோழை என்றே கருதுகின்றனர். உண்மையிலேயே ஒரு மனிதன் தனக்கு தீங்கு செய்யும் இன்னொரு மனிதனை மன்னிப்பானால் அது அந்த மனிதனுடைய மிகுந்த மனவலிமையையே காண்பிக்கிறது.

பழைய ஏற்பாட்டிலுள்ள மிகப்பெரிய தீர்க்கதரிசி மோசே, தேவனை முகமுகமாய் தரிசித்தவன். ஆனால் அவன் மேற்கண்ட வசனத்தில் உம்மை அறிவதற்கு உம்முடைய வழியை எனக்கு அறிவியும் என்று விண்ணப்பம் பண்ணுகிறான்.

ஒரு மனிதன் இயேசுவை நேசிக்க வேண்டுமானால், முதலாவது அவர் யார்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒருமுறை சென்னையிலுள்ள சில போதகர்கள், தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து, தங்களுக்கு ஒரு தேவாலயம் கட்ட இரண்டு கிரவுண்ட் புறம்போக்கு நிலம் தருமாறு வேண்டிக்கொண்டனர். இதற்கு தாங்கள் உயிருள்ள நாளெல்லாம் நன்றியுள்ளவர்களாய் இருப்போம் என்றனர். அதற்கு அவர் சொன்னாராம், உங்கள் தெய்வம் புறம்போக்கு தெய்வமாய் இருந்திருந்தால் நான் புறம்போக்கு நிலத்தை தந்திருப்பேன். இயேசுவோ உன்னதமான கடவுளல்லவா? அவருக்கு எப்படி நான் புறம்போக்கு நிலத்தை கொடுப்பது என்று கேள்வி எழுப்பினாராம். அப்போது அந்த போதகர்கள் வாயடைத்துபோனார்களாம். ஆம் அவருக்கு இயேசுவை குறித்த நல்ல ஒரு வெளிப்பாடு இருக்கிறது. இன்று அநேகர் இயேசுவுக்கு செல்லுபடியாக பண நோட்டுகளையும், கிழிந்து போன நோட்டுக்களையும் காணிக்கையாய் கொடுக்கும்போது அவருக்கு ஒரு மேன்மையான வெளிப்பாடு இருந்திருக்கிறது. தேவன் அவரை இன்னும் ஆசீர்வதிப்பாராக!

அதுபோல பேதுருவுக்கு பரத்திலிருந்து ஒரு வெளிப்பாடு கிடைத்தது. அநேகர் இயேசுவை எலியா என்றும் தீர்க்க தரிசிகளில் ஒருவர் என்றும் நம்பினார்கள். ஆனால் பேதுரு இயேசுவைப் பார்த்து சொன்னார் நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்த்து என்றார். ஒரு முறை பிசாசு பிடித்திருந்த ஒருவன் இயேசுவை பார்த்த போது அவனுக்குள் இருந்த பிசாசு இயேசுவைப் பார்த்து சொன்னது, நீர் உன்னதமான தேவனுடைய குமாரன் என்று. ஆம் அந்த பிசாசும் இயேசு யார் என்பதை அறிந்திருந்தது.

இன்று அநேகர் இயேசுவை குறித்து தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே வெட்கப்படுகிறோம். தைரியமாய் சினிமா நட்சத்திரங்களையும், விளையாட்டு வீரர்களையும், வாய் பேச முடியாத தெய்வங்களையும் பேசும்போது நாம் இயேசுவைக் குறித்து வெட்கப்படுவது ஏனோ? நம்மை யார் என்று தெரியாத அந்த நபரகளுக்காய் நாம் இவ்வளவு வைராக்கியம் பாராட்டுகிறோம். ஆனால் அவர்கள் நமக்கு ஒரு சிறு உதவி கூட செய்யமாட்டார்கள். மாறாக நாம் தொழுது கொள்ளுகிற போதெல்லாம் நமக்கு சமீபமாய் வந்து நமக்கு உதவி செய்யகிற இயேசு அப்பாவை குறித்து நாம் வெட்கப்பட அவர் மேற்கூறியவர்களை காட்டிலும் கேவலமானவரோ? நமக்காக ஜீவனையே தந்தது இயேசு தானே. இதற்கு காரணம் நாம் அவரைக்குறித்து அறிந்து கொள்ளாததே.

அவரை அறிந்த அநேக ராஜாக்களும், நேதாக்களும், கனவான்களும் அவரை வெட்கப்படாமல் பின்பற்றினார்கள். அவர்களெல்லாம் தேவனால் கனப்படுத்தப்பட்டார்கள். பூமியின் உயர்ந்த இடங்களில் தேவனால் அமர்த்தப்பட்டார்கள். ஆசிரியராய் இருந்து, ஜனாதிபதியாய் உயர்த்தப்பட்டவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள். ஒரு முறை அவர் குரு - சிஷ்யன் என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது உயர் குல வகுப்பை சார்ந்த ஒரு மாணவன் அவரைப்பார்த்து கேட்டார், ஐயா நான் உங்களை என்னுடைய குருவாக ஏற்றுக் கொள்ளுகிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று. அதற்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னாராம், இந்த உலகில் குருவாக இருக்க முழுதகுதியுள்ளவர் ஒரே ஒருவர் இயேசு தான். அவரை குருவாக ஏற்றுக்கொள் என்று சொன்னாராம். இந்த பதிலை அவரிடமிருந்து சற்றும் எதிர்பார்க்காத அந்த மாணவன் அப்படியே நிலை குலைந்து நின்றாராம். ஆனாலும் அந்த ஒரே ஒரு வார்த்தை அவரை பின்னாட்களில் இயேசுவண்டை திரும்ப செய்தது.

வட நாட்டில் ஒருவிசை ஒரு குடும்பத்துலுள்ள சிறு குழந்தை காணாமற்போனது. எல்லா இடங்களிலும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. அவர்களுடைய நம்பிக்கை முழுவதும் அற்றுப்போயிற்று. நாட்கள் சில கடந்து சென்றன, அப்போது அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு மிசனரி ஒருவர் இயேசுவைக் குறித்து சொன்னது ஞாபகம் வரவே, அவர்கள் இயேசுவின் உதவியை நாடினார்களாம். அவர்களுக்கு இயேசுவைப்பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாது, இருப்பினும் அவர்கள் ஜெபித்த சில மணிநேரங்களுக்குள் ஒருவர் அந்த குழந்தையுன் வந்து, பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்தார். அப்போது அவரிடம் தாங்கள் யார் என்பதை விசாரித்தனர். அதற்கு அவர், நீங்கள் யாரிடம் அந்த குழந்தையை கண்டுபிடித்து தரவேண்டுமென்று நீங்கள் விண்ணப்பம் பண்ணிநீர்களோ அவர் தான் நான் என்று சொல்லி அவர் கடந்து போய் விட்டார். அவரைக்குறித்து அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவர் வந்தபோது, அவர்களுடைய ஒரு சிறு நாய்க்குட்டி அவர் முன்பாக வந்து தன் இரண்டு முன்னங்கால்களையும் கூப்பிய படி அவர் முன்பாக அமர்ந்தது. அவர் திரும்பிபோனபின்பும் பலமணிநேரங்கள் அந்த நாய்க்குட்டி அந்த இடத்தை விட்டு அகலவே இல்லை. காரணம் அந்த நாய்க்குட்டிக்கு அங்கு வந்தது யார் என்பது தெரிந்தது, அவர் தன்னை உருவாக்கின சிருஷ்ட்டி கர்த்தா, காணக்கிடைக்காத சொக்க தங்கம் இயேசு என்பது அதற்கு தெரிந்ததினாலேயே. ஆறறிவு படைத்த மனிதன் அவரை அறியவில்லை, ஆனால் ஐந்தறிவு படைத்த அந்த நாய்க்குட்டியை நினைக்கும்போது ஆச்சர்யமாய் இருக்கிறது.

நாமும் இயேசுவை இன்னும் அறியவும், இன்னும் அவரை கிட்டிசேரவும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்து அவரை தரிசிக்கவும் பிரயாசப்படுவோம். அதற்கு வேண்டிய விஷேசித்த கிருபைகளை தேவன் எனக்கும் உங்களுக்கும் தருவாராக!

மாத்திரமல்ல நம்முடைய இதயம் இயேசுவுக்காய் துடிக்கட்டும், நம்முடைய இளம் ரத்தம் இயேசுவுக்காய் கொதிக்கட்டும். நம்முடைய உயிர் மூச்சு இயேசு என்று சுவாசிக்கட்டும். (சுவாசம் மேலிழுக்கும் போது ஏ என்றும் வெளிவிடும்போது சு என்றும் வருவது இயற்கையின் வரப்பிரசாதம். ஒரு மனிதன் சுவாசிப்பதே இயேசு என்று தான்). நமது கடைசி ஜீவன் இயேசு என்று பிரியட்டும். இயேசுவுக்காய் நம்மை சமர்ப்பிப்போம், அவரே நம்முடைய பரம பிதா. அவருக்கே இன்றும், என்றுமுள்ள சதா காலங்களிலும் மகிமையுண்டாவதாக!


Saturday, May 15, 2010

இன்று ஒரு கேள்வி – 6

இயேசுவுக்கே மகிமை


இன்று ஒரு கேள்வி – 6


தாவீது கோலியாத்தை கொன்று, வெற்றியோடு திரும்புகையில் பெண்கள் நடனமாடி; சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறை, முறையாக பாடினர். இப்படி பாடியதால் சவுல், தாவீதின் மேல் பொறாமைகொண்டான். இது சவுலுடைய ராஜ்யபார வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று. அந்த பெண்கள் பாடியது தவறா? இல்லை சவுல் புரிந்து கொண்டது தவறா? உங்கள் கருத்தை வேத வசன ஆதாரத்துடன் எழுதி அனுப்பலாம்.

1 . மேற்கண்ட கேள்விகளின் விடையை எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 21.05.2010 .


2 .
சரியான விடையை எழுதி அனுப்புவோரின் பெயர்கள் இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


3 .
இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


4 .
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail.com

5 . மறவாமல் உங்களது முழுப் பெயரையும், ஊர் பெயரையும், தாங்கள் செல்லும் சபையின் பெயரையும் குறிப்பிடவும்.

08.05.2010 அன்றைய ன்று ஒரு கேள்வி 5” க்கான சரியான விடைகள்.


யோவான் 8:56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாய் பிறப்பதற்கு, சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் ஆபிரகாம். மேற்கண்ட வசனத்தில் இயேசு சொன்னார்; ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். ஆபிரகாம் எங்கே, எப்போது இயேசுவை கண்டார்?


ஆபிரகாம் தன் ஏக சுதனும், நேச குமாரனுமாகிய ஈசாக்கை பலிபீடத்தின் மேல் கிடத்தி, அவனை பலியிட துணிந்த போது கர்த்தருடைய தூதனானவர் அவனை தடை செய்து, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் காண்பித்தார். அந்த ஆட்டுக்கடா யார் தெரியுமா? பரிசுத்த வேதம் கூறுகிறது; வெளி 5:6 இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; ஆம் அந்த ஆட்டுக்குட்டி உலக தோற்றத்திற்கு முன்பே அடிக்கப்பட்டவண்ணமாயிருந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து . ஆபிரகாம் தன் ஏக சுதனும், நேச குமாரனுமாகிய ஈசாக்கை பலியிட துணிந்த போது அவருடைய இதயம் சுக்கு நூறாய் உடைந்திருக்கும். ஆனால் ஈசாக்குக்கு பதிலாக அந்த முட்புதரில் சிக்கியிருந்த ஆட்டுகடாவை அவர் பார்த்த போது அவர் இதயம் களிகூர்ந்தது. அந்த ஆட்டுக்கடா ஈசாக்கிற்கு பதிலாக பலியிடப்பட்டது, ஆகவே ஈசாக்கு காப்பாற்றப்பட்டான். அதுபோலவே நாம் ஆக்கினைதீர்படைய வேண்டிய இடத்தில் கல்வாரி சிலுவையிலே இயேசு நமக்கு பதிலாக ஆகினைதீர்ப்படைந்தார். ஆகவே நாம் நமக்கு வரவேண்டிய தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டோம்.

கிறிஸ்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.