Saturday, May 29, 2010

பிதாவின் சித்தம்

இயேசுவுக்கே மகிமை

பிதாவின் சித்தம்

எபிரெயர்10:7 அப்பொழுது நான்(இயேசு): தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் முழுவதுமாக தன்னை பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, அவர் சித்தம் ஒன்றையே செய்ய மிக ஜாக்கிரதையாய் இருந்தார். சுமார் மூன்றரை ஆண்டுகள் பிதாவின் சித்தப்படியே ஜனங்களுக்கு சுவிஷேசத்தை அறிவித்தார். இந்த பூமியில் பிதா தன் மூலம் செய்ய நினைத்த எல்லாவற்றையும் நிறைவேற்றி முடித்தபின்பு தான் இயேசு மேற்கண்ட வசனத்தில் சொன்னபடி புஸ்தகத்தில் என்னை குறித்து எழுதியிருக்கிறபடி உம் சித்தம் செய்ய வருகிறேன் என்றார்.

பொதுவாக நாம் சில காரியங்களுக்காக போராடுவோம், கடைசியில் அது கிடைக்காமல் போகும்போது தேவ சித்தப்படியே ஆகக்கடவது என்போம். ஆனால் இயேசு அப்படியல்ல முன்பதாகவே பிதாவின் சித்தம் என்ன என்பதை அறிந்திருந்தார். அவர் படவேண்டிய பாடுகள் எவ்வளவு என்பதை அறிந்திருந்தார்.

ஜனங்களின் பாவம் தன் மேல் சுமத்தப்படும்போது பிதாவாகிய தேவன் தன்னுடைய முகத்தை மறைத்துக்கொள்வார் என்பதை அவர் அறிந்திருந்தார். பிதாவாகிய தேவன் தன்னுடைய முகத்தை மறைக்கும்போது அதை தன்னால் தாங்க முடியாது என்பதை அவர் அறிவார். ஆகவே தான் இயேசு பிதாவை நோக்கி சொன்னார்,

லூக்கா 22:42 பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

இயேசு: புஸ்த்தக சுருளில் என்னை குறித்து எழுதியிருக்கிறது, பிதாவே உம் சித்தம் செய்ய வருகிறேன் என்றார். இயேசுவை குறித்த பிதாவின் சித்தம் என்ன?

ஏசாயா53:10. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

பிதாவாகிய தேவன், தன்னுடைய ஏக சுதனும், நேச குமாரனுமாகிய இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக, அதாவது முந்தின ஆதாமாகிய ஒரே மனிதனாலே, எல்லா மனிதர்களையும் பாவம் ஆண்டுகொண்டது போல, பிந்தின ஆதாமாகிய இயேசு கிறிஸ்த்து என்னும் ஒருவராலே முழு உலகத்திற்கும் இரட்சிப்பு உண்டாகும்படி, அவரை நொறுக்க சித்தமாகி, தேவன் அவரை பாடுகளுக்கு உட்படுத்தினார்.

எபிரெயர் 2:10 ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபவத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.

யோபுவும் தன்னுடைய வாழ்க்கையை தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து வாழ்ந்து வந்தபோது, இதே நொறுக்குதல் அவருடைய வாழ்க்கையிலும் வந்தது.

யோபு 16:14 நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரப்பண்ணினார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாயந்தார்.

ஒரு நாள் இயேசு, பல மைல் தூரம் நடந்து ஊழியம்செய்ததினிமித்தம் களைப்படைந்தவராய் ஒரு கிணற்றின் அருகே உட்கார்ந்தார். அப்போது சமாரியா ஸ்திரீக்கு நற்செய்தி அறிவித்து அவளை இரட்சிப்புக்குள் நடத்தினார். அந்தவேளையில் சீசர்கள் போஜன பதார்த்தங்களை வாங்கும்படி வெளியே போயிருந்தனர். திரும்பி வந்த சீசர்களிடம் இயேசு சொன்னார் பிதாவின் சித்தத்தை செய்வதே என் போஜனமாய் இருக்கிறது என்றார்.

யோவான் 4:34. இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.

ஆம் இயேசு பிதாவின் சித்தத்தை செய்வதை தன் போஜனமாய் கருதினார். ஒரு மனிதன் உயிர்வாழ வேண்டுமானால் அவன் குழந்தையாய் பிறந்ததிலிருந்து தன் போஜனத்தை புசித்தாக வேண்டும். குழந்தை பிறந்த சில நிமிடங்களிலிருந்து தாய் பால் குடிக்க ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து அந்த குழந்தை மரிக்கும் நாள் வரை அது உயிர்வாழ வேண்டுமானால் ஆகாரம் புசித்தாக வேண்டும். ஒரு வேளை அந்த மனிதன் ஆகாரம் புசிக்க முடியாமல் மரணவேளையில் ஹோமா நிலையில் இருந்தாலும், அந்த மனிதன் மரிக்கும் வரையிலும் குளுக்கோஸாக அவனுடைய உடலினுள் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

ஆம் ஒரு மனிதன் ஆவிக்குரிய பிரகாரமாக தன் பாவங்கள் இயேசுவின் ரத்தத்தினால் கழுவப்பட்டு மறுபடியும் பிறந்ததிலிருந்து அவன் தேவ சித்தம் செய்தாக வேண்டும். ஒரு வேளை மரண வேளையாய் இருந்தாலும் தேவ சித்தம் மாத்திரமே செய்யப்படவேண்டும். ஒருவேளை நாம் கேட்கலாம் மரண வேளையில் எப்படி தேவ சித்தம் செய்ய முடியும்? என்று. இயேசு சிலுவையில் மரிக்கும் சற்று முன்பும் தன்னோடு சிலுவையில் தொங்கிய ஒரு மனிதனுக்கு சுவிசேஷத்தை அறிவித்து, அவனை இரட்சிப்புக்குள் நடத்தி பிதாவின் சித்தத்தை அங்கு நிறைவேற்றினார்.

நம்முடைய மரண வேளையிலும் நாம் நம்முடைய சிந்தையில் அசுத்தங்கள் வராதபடி நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கிருபைகளை தேவன் எனக்கும் உங்களுக்கும் தருவாராக! நாம் பரிசுத்தமாய் வாழ வேண்டுமென்பதும் தேவ சித்தமே.

Iதெசலோனிக்கேயர்4:3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,

நாம் பாவம் செய்து மீண்டும் இயேசுவை சிலுவையில் அறைந்து அவரை துக்கப்படுத்தாதிருக்க வேண்டிய கிருபைகளை தேவன் நமக்கு தருவாராக! நாம் பரிசுத்தமாய் வாழும்போது இயேசு தான் சிலுவையில் பட்ட பாடுகளை மறந்து சந்தோஷப்படுவார்.


கிறிஸ்த்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

1 comment: