Saturday, May 29, 2010

வாழ்க்கை சுவையுள்ளதாய் மாற

இயேசுவுக்கே மகிமை

வாழ்க்கை சுவையுள்ளதாய் மாற

இன்று அநேகருடைய வாழ்க்கை தோல்விகளால் நிறைந்திருப்பதால் வாழ்க்கை சுவையற்றதாய் மாறிவிடுகிறது. இதனால் வாழ்க்கை வெறுத்துப்போகிறது.

தண்ணீருக்கு சுவையில்லை, நிறமில்லை, வாசனையுமில்லை. ஒரு நாள் இந்த தண்ணீர் சுவை, நிறம், வாசனை உள்ளதாய் மாறினது. அது எங்கே, எப்போது தெரியுமா?

ஆண்டவராகிய இயேசு கானாவூர் என்னுமிடத்தில் நடந்த திருமணத்திற்கு அவருடைய தாயாருடன் கடந்து சென்றார். திடீரென அங்கு திராட்சை ரசம் குறைவுபட்டது. எல்லாரும் குறைவை நினைத்து கலங்கி நின்ற போது, இயேசுவின் தாய், இயேசுவிடம் சென்று அந்த குறைவை அவருக்கு தெரிவித்தார்கள்.

இயேசுவோ அங்கிருந்த கற்சாடிகளை தண்ணீரால் நிரப்பும்படி கட்டளையிட்டார். அப்படியே அவர்களும் செய்ய, அந்த சாதாரண தண்ணீரை மொண்டு பந்தி விசாரிப்புகாரனிடம் கொண்டுபோக சொன்னார். அதை ருசிபார்த்த பந்தி விசாரிப்புக்காரன் கீழ் கண்டவாறு மணவாளனிடம் கூறினான்.

யோவான் 2:

9. அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:

10.
எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.

பிரியமானவர்களே இயேசு அந்த தண்ணீரை பார்த்து நீ திராட்சை ரசமாய் மாறுவாயாக என்று கட்டளையிடவில்லை, அல்லது அவர் வேறு ஏதோ ஒன்றை செய்யவில்லை. ஆனால் அந்த நிறம், சுவை, வாசனையற்ற தண்ணீர் நிறம், சுவை, வாசனையுள்ள திராட்சை ரசமாய் மாறிற்று. அங்கு என்ன நடந்திருக்கும்? அந்த தண்ணீர் அன்று யூத பாரம்பரிய படி பாதங்களை கழுவுவதற்காக, வெளியே சாதாரண கற்சாடிகளில் வைக்கப்பட்டிருந்தது. இவைகளை யாரும் மதிக்கவோ, வந்தனம் செய்யவோ மாட்டார்கள். ஆனால் இந்த சாதாரன தண்ணீரின் அருகில் சர்வ வல்லமையுள்ள தேவன், சிருஷ்டிகர்த்தா, பதினாயிரன்களுள் சிறந்தவர் இயேசு வந்து நின்றவுடன் அந்த தண்ணீருக்கு தாங்க முடியாத சந்தோசம், அது தனக்குள்ளே பூரித்து மகிழ்ந்து, அந்த மகிழ்ச்சியிலே அது சுவையுள்ள ரசமாய் மாறினது.

ஆம் பிரியமானவர்களே நாமும் வாழ்கையில் குறைவுள்ளவர்களாய் இருக்கிறோமா ? தேவையுள்ளவர்களாய் இருக்கிறோமா ? அந்த கற்சாடிகளை போல மற்றவர்களால் புறக்கணிக்கபட்டிருக்கிறோமா? வாழ்க்கை தண்ணீரை போல சுவையற்றிருக்கிறதா? அன்று மரியாள் இயேசுவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது போல, உங்களுக்கு பரிகாரியாகிய கர்த்தரை, பரம வைத்தியராம் இயேசுவை அறிமுகப்படுத்துகிறோம். அன்று அங்கு இயேசு முதலாம் அற்புதத்தை செய்தார். இன்று நாமும் இந்த இயேசுவை ஏற்று கொண்டால் நம்முடைய வாழ்கையில் முதலாம் அற்புதத்தை துவங்க இயேசு ஆவலுள்ளவராய் காத்து நிற்கிறார். மாத்திரமல்ல முந்தின ரசத்தை பார்க்கிலும் பிந்தின அந்த ரசம் சுவையுள்ளதாய் இருந்தது போல நம்முடைய பழைய வாழ்க்கையை விட புதிய வாழ்க்கை சிறந்ததாய் இருக்கும். இயேசு நம் அருகில் வந்தால் மாத்திரம் போதும், மரித்த சரீரமாய் இருதாலும் அவர் பிரசன்னத்தால், நமக்குள் ஏற்படும் பூரிப்பினால் அது உயிரடைந்து விடும். பழைய சுவை, நிறம், வாசனையற்ற நிலைமை மாறி வாழ்க்கை சுவை, நிறம், வாசனையுள்ளதாய் மாறி விடும். சுவையுள்ள திராட்சை ரசத்தை தேடி அநேகர் வருவது போல நம் தயவை நாடி அநேகர் நம்மை தேடி வருவார்கள்.

மாற்கு 10:27 இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

எரேமியா 32:27 இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?

நம்முடைய வாழ்க்கை கேள்விக்குறியை போல இருந்தாலும், அதாவது கேள்விக்குறி (?) பொதுவாகவே கொக்கி போல வளைந்து இருக்கும், அதுபோல தலைகுனிந்த வாழ்க்கையாய் இருந்தாலும், நாம் இயேசுவிடம் வரும் போது அவர் நம்முடைய வாழ்க்கையை ஆச்சர்ய குறி போல மாற்றுவார். ஆச்சர்ய குறி பொதுவாகவே நிமிர்ந்து (!) நிற்கும். அதுபோலவே நம்முடைய வாழ்க்கையை ஆண்டவர் தலை நிமிர்ந்து நிற்க பண்ணுவார்.

லேவியராகமம் 26:13 நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.


கிறிஸ்த்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment