Saturday, May 29, 2010

இயேசுவை அறிந்து கொள்வோம்

இயேசுவுக்கே மகிமை

இயேசுவை அறிந்து கொள்வோம்

யாத்திராகமம் 33 : 13. உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான்.

இன்று அநேகர் இயேசுவை ஒரு கோழையாக கருதுகின்றனர். காரணம் அவர் அன்பையும், சாந்த குணத்தையும், மனத்தாழ்மையையும் போதிக்கிறபடியாலும், சத்துருவை சினேகிக்கவும், மன்னிக்கவும் சொல்லுகிறபடியாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத, வலிமையில்லாத ஒரு கடவுள் என்று கருதுகின்றனர். அதைப்போலவே கிறிஸ்த்தவர்களையும் அநேகர் கோழை என்றே கருதுகின்றனர். உண்மையிலேயே ஒரு மனிதன் தனக்கு தீங்கு செய்யும் இன்னொரு மனிதனை மன்னிப்பானால் அது அந்த மனிதனுடைய மிகுந்த மனவலிமையையே காண்பிக்கிறது.

பழைய ஏற்பாட்டிலுள்ள மிகப்பெரிய தீர்க்கதரிசி மோசே, தேவனை முகமுகமாய் தரிசித்தவன். ஆனால் அவன் மேற்கண்ட வசனத்தில் உம்மை அறிவதற்கு உம்முடைய வழியை எனக்கு அறிவியும் என்று விண்ணப்பம் பண்ணுகிறான்.

ஒரு மனிதன் இயேசுவை நேசிக்க வேண்டுமானால், முதலாவது அவர் யார்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒருமுறை சென்னையிலுள்ள சில போதகர்கள், தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து, தங்களுக்கு ஒரு தேவாலயம் கட்ட இரண்டு கிரவுண்ட் புறம்போக்கு நிலம் தருமாறு வேண்டிக்கொண்டனர். இதற்கு தாங்கள் உயிருள்ள நாளெல்லாம் நன்றியுள்ளவர்களாய் இருப்போம் என்றனர். அதற்கு அவர் சொன்னாராம், உங்கள் தெய்வம் புறம்போக்கு தெய்வமாய் இருந்திருந்தால் நான் புறம்போக்கு நிலத்தை தந்திருப்பேன். இயேசுவோ உன்னதமான கடவுளல்லவா? அவருக்கு எப்படி நான் புறம்போக்கு நிலத்தை கொடுப்பது என்று கேள்வி எழுப்பினாராம். அப்போது அந்த போதகர்கள் வாயடைத்துபோனார்களாம். ஆம் அவருக்கு இயேசுவை குறித்த நல்ல ஒரு வெளிப்பாடு இருக்கிறது. இன்று அநேகர் இயேசுவுக்கு செல்லுபடியாக பண நோட்டுகளையும், கிழிந்து போன நோட்டுக்களையும் காணிக்கையாய் கொடுக்கும்போது அவருக்கு ஒரு மேன்மையான வெளிப்பாடு இருந்திருக்கிறது. தேவன் அவரை இன்னும் ஆசீர்வதிப்பாராக!

அதுபோல பேதுருவுக்கு பரத்திலிருந்து ஒரு வெளிப்பாடு கிடைத்தது. அநேகர் இயேசுவை எலியா என்றும் தீர்க்க தரிசிகளில் ஒருவர் என்றும் நம்பினார்கள். ஆனால் பேதுரு இயேசுவைப் பார்த்து சொன்னார் நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்த்து என்றார். ஒரு முறை பிசாசு பிடித்திருந்த ஒருவன் இயேசுவை பார்த்த போது அவனுக்குள் இருந்த பிசாசு இயேசுவைப் பார்த்து சொன்னது, நீர் உன்னதமான தேவனுடைய குமாரன் என்று. ஆம் அந்த பிசாசும் இயேசு யார் என்பதை அறிந்திருந்தது.

இன்று அநேகர் இயேசுவை குறித்து தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே வெட்கப்படுகிறோம். தைரியமாய் சினிமா நட்சத்திரங்களையும், விளையாட்டு வீரர்களையும், வாய் பேச முடியாத தெய்வங்களையும் பேசும்போது நாம் இயேசுவைக் குறித்து வெட்கப்படுவது ஏனோ? நம்மை யார் என்று தெரியாத அந்த நபரகளுக்காய் நாம் இவ்வளவு வைராக்கியம் பாராட்டுகிறோம். ஆனால் அவர்கள் நமக்கு ஒரு சிறு உதவி கூட செய்யமாட்டார்கள். மாறாக நாம் தொழுது கொள்ளுகிற போதெல்லாம் நமக்கு சமீபமாய் வந்து நமக்கு உதவி செய்யகிற இயேசு அப்பாவை குறித்து நாம் வெட்கப்பட அவர் மேற்கூறியவர்களை காட்டிலும் கேவலமானவரோ? நமக்காக ஜீவனையே தந்தது இயேசு தானே. இதற்கு காரணம் நாம் அவரைக்குறித்து அறிந்து கொள்ளாததே.

அவரை அறிந்த அநேக ராஜாக்களும், நேதாக்களும், கனவான்களும் அவரை வெட்கப்படாமல் பின்பற்றினார்கள். அவர்களெல்லாம் தேவனால் கனப்படுத்தப்பட்டார்கள். பூமியின் உயர்ந்த இடங்களில் தேவனால் அமர்த்தப்பட்டார்கள். ஆசிரியராய் இருந்து, ஜனாதிபதியாய் உயர்த்தப்பட்டவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள். ஒரு முறை அவர் குரு - சிஷ்யன் என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது உயர் குல வகுப்பை சார்ந்த ஒரு மாணவன் அவரைப்பார்த்து கேட்டார், ஐயா நான் உங்களை என்னுடைய குருவாக ஏற்றுக் கொள்ளுகிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று. அதற்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னாராம், இந்த உலகில் குருவாக இருக்க முழுதகுதியுள்ளவர் ஒரே ஒருவர் இயேசு தான். அவரை குருவாக ஏற்றுக்கொள் என்று சொன்னாராம். இந்த பதிலை அவரிடமிருந்து சற்றும் எதிர்பார்க்காத அந்த மாணவன் அப்படியே நிலை குலைந்து நின்றாராம். ஆனாலும் அந்த ஒரே ஒரு வார்த்தை அவரை பின்னாட்களில் இயேசுவண்டை திரும்ப செய்தது.

வட நாட்டில் ஒருவிசை ஒரு குடும்பத்துலுள்ள சிறு குழந்தை காணாமற்போனது. எல்லா இடங்களிலும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. அவர்களுடைய நம்பிக்கை முழுவதும் அற்றுப்போயிற்று. நாட்கள் சில கடந்து சென்றன, அப்போது அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு மிசனரி ஒருவர் இயேசுவைக் குறித்து சொன்னது ஞாபகம் வரவே, அவர்கள் இயேசுவின் உதவியை நாடினார்களாம். அவர்களுக்கு இயேசுவைப்பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாது, இருப்பினும் அவர்கள் ஜெபித்த சில மணிநேரங்களுக்குள் ஒருவர் அந்த குழந்தையுன் வந்து, பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்தார். அப்போது அவரிடம் தாங்கள் யார் என்பதை விசாரித்தனர். அதற்கு அவர், நீங்கள் யாரிடம் அந்த குழந்தையை கண்டுபிடித்து தரவேண்டுமென்று நீங்கள் விண்ணப்பம் பண்ணிநீர்களோ அவர் தான் நான் என்று சொல்லி அவர் கடந்து போய் விட்டார். அவரைக்குறித்து அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவர் வந்தபோது, அவர்களுடைய ஒரு சிறு நாய்க்குட்டி அவர் முன்பாக வந்து தன் இரண்டு முன்னங்கால்களையும் கூப்பிய படி அவர் முன்பாக அமர்ந்தது. அவர் திரும்பிபோனபின்பும் பலமணிநேரங்கள் அந்த நாய்க்குட்டி அந்த இடத்தை விட்டு அகலவே இல்லை. காரணம் அந்த நாய்க்குட்டிக்கு அங்கு வந்தது யார் என்பது தெரிந்தது, அவர் தன்னை உருவாக்கின சிருஷ்ட்டி கர்த்தா, காணக்கிடைக்காத சொக்க தங்கம் இயேசு என்பது அதற்கு தெரிந்ததினாலேயே. ஆறறிவு படைத்த மனிதன் அவரை அறியவில்லை, ஆனால் ஐந்தறிவு படைத்த அந்த நாய்க்குட்டியை நினைக்கும்போது ஆச்சர்யமாய் இருக்கிறது.

நாமும் இயேசுவை இன்னும் அறியவும், இன்னும் அவரை கிட்டிசேரவும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்து அவரை தரிசிக்கவும் பிரயாசப்படுவோம். அதற்கு வேண்டிய விஷேசித்த கிருபைகளை தேவன் எனக்கும் உங்களுக்கும் தருவாராக!

மாத்திரமல்ல நம்முடைய இதயம் இயேசுவுக்காய் துடிக்கட்டும், நம்முடைய இளம் ரத்தம் இயேசுவுக்காய் கொதிக்கட்டும். நம்முடைய உயிர் மூச்சு இயேசு என்று சுவாசிக்கட்டும். (சுவாசம் மேலிழுக்கும் போது ஏ என்றும் வெளிவிடும்போது சு என்றும் வருவது இயற்கையின் வரப்பிரசாதம். ஒரு மனிதன் சுவாசிப்பதே இயேசு என்று தான்). நமது கடைசி ஜீவன் இயேசு என்று பிரியட்டும். இயேசுவுக்காய் நம்மை சமர்ப்பிப்போம், அவரே நம்முடைய பரம பிதா. அவருக்கே இன்றும், என்றுமுள்ள சதா காலங்களிலும் மகிமையுண்டாவதாக!


No comments:

Post a Comment