Saturday, May 29, 2010

சுமை தாங்கி

இயேசுவுக்கே மகிமை

சுமை தாங்கி

மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில்(இயேசு) வாருங்கள்; நான்(இயேசு) உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் சுமக்க முடியாத சுமை ஒன்றை தலையில் வைத்துக்கொண்டு, கிராமத்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டி ஒன்று வந்து கொண்டிருந்தது. பாட்டியின் தாங்க முடியாத சுமையை பார்த்த, அந்த வண்டிக்காரனுக்கு பாட்டியின் மேல் அனுதாபம் வந்தது. எனவே அந்த பாட்டியை தன்னுடைய மாட்டுவண்டியில் ஏறும்படி சொன்னான். பாட்டியும் மிக சந்தோஷமாக அந்த மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டார்கள்.

சற்று தூரம் சென்ற பின்பு, வண்டிக்காரன் பாட்டியை திரும்பிப் பார்த்தான். பாட்டி இன்னும் அந்த பார சுமையை தன்னுடைய தலையின் மேல் வைத்துக்கொண்டு, வண்டியின் மேல் அமர்ந்திருந்தார்கள். அதை பார்த்த வண்டிக்காரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பாட்டியை பார்த்து சொன்னான், பாட்டி அந்த சுமையை வண்டியின் மேல் இறக்கி வைக்கவேண்டியதுதானே என்று. அதற்கு அந்த பாட்டி சொன்னார்களாம், அய்யா எனக்கு உட்கார இடம் கிடைத்ததே சந்தோசம், நான் அந்த சுமையையும் இறக்கி வண்டியின் மேல் வைத்தால் வண்டியை இழுக்கிற மாடு பாவம், அது அந்த சுமையையும் சேர்த்து இழுக்கும்போது அதற்கு சுமை அதிகமாகும் என்றார்களாம். ஆகவே தான் பரிசுத்த வேதம் சொல்லுகிறது,

ஓசியா 4:6 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய் ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.

ஏசாயா 5:13 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கடினமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள், அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்.

பழைய காலங்களில் சாலையோரங்களில் சுமைதாங்கி என்ற ஒன்று இருக்கும். வழிப்போக்கர்கள் தாங்கள் களைத்துப்போகும்போது, தங்கள் தலையின் மேல் உள்ள பாரத்தை சற்று நேரம் அந்த சுமை தாங்கியின் மேல் வைத்து இளைப்பாறுவார்கள். மீண்டும் சற்று நேரம் கழித்து அவற்றை சுமந்து செல்வார்கள், ஆனால் அவர்களுக்கு ஒரு நிரந்தர விடுதலையில்லை.

நமக்கோ ஒரு நிரந்தர சுமை தாங்கியாக ஆண்டவர் இயேசு இருக்கிறார். ஆகவே நாம் இன்னும் ஏன் பாரத்தை சுமந்து தவிக்க வேண்டும்? நம்முடைய பாவ பாரமா? இல்லை சாபமா? இல்லை கடன் பாரமா? இல்லை சமாதானக் குறைவா? இல்லை வேலையில்லா திண்டாட்டமா? இல்லை தீராத வியாதியா? எந்த பாரமாய் இருந்தாலும் தன்னுடைய சிலுவை சுமந்த தோளின் மேல் அவற்றையெல்லாம் நிரந்தரமாய் சுமக்க இயேசு ஆவலுள்ளவராய் இருக்கிறார். அந்த பாட்டியை போல நாம் இராத படி, நாம் நம்முடைய எல்லா பாரத்தையும் இயேசு அப்பாவிடம் இறக்கி வைப்போம். அவர் நமக்கு இளைப்பாறுதல் தருவார்.

I பேதுரு 5:7 அவர் (இயேசு) உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment