Saturday, May 29, 2010

லேட்டா வந்தாலும் லாட்டா வரும்

இயேசுவுக்கே மகிமை

லேட்டா வந்தாலும் லாட்டா வரும்

சங்கீதம் 90:15 தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும், சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.

அடுக்கடுக்காய் ஆசீர்வாதங்கள் வந்தால்தான், ஒருவனை தேவன் நேசிக்கிறார் என்று அர்த்தமல்ல. ஒருவேளை ஆசீர்வாதங்கள் ஒரு சிலருக்கு தாமதித்தால் அவர்கள் விசுவாசத்தில் குறைந்தவர்கள் என்று கருதுவது, எல்லா இடங்களிலும் சரியாகாது. ஒரு சிலரை தேவன் உபத்திரவத்தின் பாதையில் நடத்தி நாம் நினைக்கிறதற்கும், வேண்டிகொள்கிறதற்கும் அதிகமாய் நம்மை ஆசீர்வதிப்பார். ஒரு மனிதன் தேவனுக்காய் காத்திருப்பானேயானால் ஒரு போதும் தேவன் அவனை வெட்க்கப்படுத்தமாட்டார்.

சங்கீதம் 34:5 அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.

ஒரு சில நேரங்களில் ஆசீர்வாதங்கள் எளிதாய் கிடைத்தால், அதில் அநேகர் இடறிப்போய்விடுகின்றனர், அந்த ஆசீர்வாதத்தின் அருமை நமக்குபுரிவதில்லை. எனவே அநேகர் கிடைத்த ஆசீர்வாதத்தை குடித்து, வெறித்து அழித்துவிடுகின்றனர்.

நீதிமொழிகள் 20:21 ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.

தேவன் தம்மை சார்ந்து கொள்ளுகிறவர்களை ஆசீர்வதிக்கும் படிகள், முதலாவது பூரண ஆசீர்வாதம். இது நம்முடைய தேவைகள் சந்திக்கப்படும் ஆசீர்வாதம். இரண்டாவது சம்பூரண ஆசீர்வாதம், இது நம்முடைய தேவைக்கும் அதிகமானது. மூன்றாவது பரிபூரண ஆசீர்வாதம். இது நிரம்பி வழியும் ஆசீர்வாதம், நம்முடைய தேவைக்கு அதிகமாகவும், பிறருக்கு மனமுவந்து கொடுக்குமளவு.

ஆகவே தான் பரிசுத்த வேதம் நமக்கு சொல்லுகிறது,

சங்கீதம் 113:

7. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.

8.
அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.

முதலாவது ஆண்டவர் நம்மை சிறுமையிலிருந்து தூக்கிஎடுக்கிறார், இரண்டாவது அவர் நம்மை உயர்த்துகிறார், மூன்றாவது அவர் நம்மை உட்காரப்பண்ணுகிறார்.

முதலாவது யோசேப்பை குழியிலிருந்து தூக்கியெடுத்து போத்திப்பாரினுடைய வீட்டில் வேலைக்காரனாய் வைக்கிறார். இரண்டாவது அவர் அவனை அங்கிருந்து சிறைச்சாலைக்கு விசாரிப்புக்காரனாய் உயர்த்துகிறார். மூன்றாவது அவனை அங்கிருந்து முழு எகிப்தினுடைய சிங்காசத்தில் உட்க்காரப்பண்ணினார் அல்லது அமரப்பண்ணினார். அங்கு யோசேப்பு எகிப்தின் ஜனத்தின் அதிபதியோடும், ஜனத்தின் பிரபுக்களோடும் உட்கார்ந்தான்.

இந்த மேன்மையான உயர்வை அவன் பெற மிக நீண்ட நாட்களாகிய பதிமூன்று வருடங்கள் அவன் காத்திருந்தான். ஆனால் அவனுடைய கர்த்தராகிய தேவன் அவனை வெட்கப்படுத்தவில்லை. அதுபோல ஆபிரகாம் மிக நீண்ட நாட்களாகிய இருபத்து ஐந்து வருடங்கள் ஒரே ஒரு குழந்தைக்காக காத்திருந்தான். ஆனால் இஸ்ரேல என்னும் ஒரு தேசத்திற்கே தகப்பனான்.

விவசாயி ஒருவன் தன்னுடைய நிலத்தில் பெரணி செடியினுடைய விதையையும், மூங்கில் செடியினுடைய விதையையும் விதைத்தார். பெரணி விதையானது சிலவாரங்களில் முளைத்து செழித்து வளர்ந்தது. ஆனால் மூங்கில் விதையிலிருந்து எந்த ஒரு முளையும் தோன்றவில்லை. தோட்டக்காரன் இரண்டாம், மூன்றாம், நான்காம் வருடமும் போய் பார்த்தான். மூங்கில் விதைத்த இடத்தில் எந்த முளையையும் பார்க்க முடியவில்லை. ஆனாலும் தோட்டக்காரன் சோர்ந்து போகாமல் தண்ணீர் பாய்ச்சினான். ஐந்தாவது வருடம் தோட்டக்காரன் போய் பார்த்தபோது மூங்கில் விதைகளிலிருந்து சிறு முளை வெளிவந்திருந்தது. சுமார் ஆறுமாதங்கள் கழித்து தோட்டக்காரன் போய், பெரணி செடியையும், பெரணி செடியையும் பார்த்தான். பெரணி செடியின் ஐந்து வருட வளர்ச்சி நான்கு அல்லது ஐந்து அடி மட்டுமே இருந்தது. ஆனால் மூங்கிலின் ஆறு மாத வளர்ச்சி முப்பது முதல் நாற்ப்பது அடியாய் இருந்தது.

ஆம் பிரியமான நண்பர்களே ஆசீர்வாதங்கள் சற்று தாமதமாய் வந்தாலும், நாம் முறுமுறுக்காமல், தேவனை உறுதியாய் பற்றிக்கொண்டால் தேவன் நாம் துன்பத்தை கண்ட வருஷங்களுக்கு தக்கதாய் தேவன் நம்மை பலமடங்கு ஆசீர்வதிப்பார்.

ஆசீர்வாதங்கள் Late ஆ வந்தாலும், தேவன் நமக்கு Lot ஆ தருவார்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment