இயேசுவுக்கே மகிமை
தடைகளை தாண்டிடுவோம்
குடியானவன் ஒருவன் கழுதை ஒன்றை வளர்த்து வந்தான். இப்போது அந்த கழுதைக்கு வயதாகி விட்டது, அதனால் அந்த கழுதையால் குடியானவனுக்கு எந்த பிரயோஜனமுமில்லாமற் போய்விட்டது. ஆகவே இந்த கழுதையை கொன்று விட தீர்மானித்தான். அதை எப்படி கொல்லலாம் என யோசித்த வனுக்கு, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் எனபது போல ஒரு யோசனை தோன்றியது. அதாவது குடியானவனுக்கு ஒரு பாழ் கிணறு ஒன்று இருந்தது. அதைக்கொண்டும் அவனுக்கு பிரயோஜனமில்லை. எனவே கழுதையை கிணற்றினுள் தள்ளி, கிணற்றை மண்ணால் மூடிவிட தீர்மானித்தான்.
மறுநாள் குடியானவன் கழுதையை கிணற்றினுள் தள்ளி, தான் நினைத்தபடியே மண்ணை அள்ளி, அள்ளி கிணற்றினுள் கொட்டினான். முதலில் கழுதை தன்னுடைய வாழ்க்கை இதோடு முடிந்தது என்று நினைத்தது. சற்று யோசித்த கழுதைக்கு ஒரு ஐடியா உதயமானது. அதாவது ஒவ்வொரு முறையும் மண்ணை அவன் கொட்டும்போது கழுதை அவற்றை உதறி தள்ளி விட்டு, அந்த மண்ணில் மேல் ஏறி நின்று விடும். இப்படி ஒவ்வொரு முறையும் நடந்தது. கடைசியாக மண் கிணற்றின் முக்கால் பகுதிக்கு வந்தவுடன் கழுதை குதித்து கிணற்றுக்கு வெளியே வந்து உயிர் பிழைத்தது.
ஆம் பிரியமானவர்களே கிறிஸ்தவ வாழ்க்கையிலும் அநேக தடைகள் வரலாம், நாம் தேவனை சார்ந்து கொண்டால் தடைகளை தாண்டிட தேவன் நமக்கு ஞானத்தை தரவும், வெற்றியை தரவும் போதுமானவர். பிசாசு நமக்கு தீமை செய்யலாம். ஆனால் தேவனோ அதே தீமையை நன்மையாக மாற்றுகிறவர். யோசப்பை எகிப்தில் அடிமை படுத்த சத்துரு திட்டம் போட்டான். அனால் அவன் தேவனுக்காய், பரிசுத்ததிற்காய் வைராக்கியம் காட்டினபடியால், தேவனும் அவனுக்காய் வைராக்கியம் பாராட்டினார். எந்த தேசத்தில் சத்துரு அவனை அடிமைப்படுத்த நினைத்தானோ, அதே தேசத்தின் சிங்காசனத்தில் அவனை உட்கார வைத்து அழகுபார்த்தார் தேவன்.
பிரியமானவர்களே பிசாசு தடைகளை கொண்டுவருகிறானா? நாம் ஒன்று செய்வோம், அந்த கழுதை மண்ணை தனக்கு படிக்கல்லாக்கி, தடைகளை தாண்டியது போல, சத்துரு நமக்கு தடையாக எதிரிட்டு வரும்போது அவனை குனிய வைத்து, அவனுடைய முதுகின் மேல் ஏறி நின்று, "யேகொவாநிசி" எங்கள் கொடி வெற்றிக் கொடி என்று பாடி சிலுவைக்கொடியை உயர்த்தி பிடிப்போம். நாம் தனியாக நின்று கொடி பிடித்தால் கொஞ்ச தூரம் மட்டுமே கொடி தெரியும். இப்போது நாம் அவனுடைய முதுகின் மேல் ஏறி நிற்பதால் சிலுவை கொடி இன்னும் அதிக தூரம் அநேகருக்கு தெரியும்.
கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment