Saturday, May 29, 2010

இயேசுவை அறிந்து கொள்வோம்

இயேசுவுக்கே மகிமை

இயேசுவை அறிந்து கொள்வோம்

யாத்திராகமம் 33 : 13. உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான்.

இன்று அநேகர் இயேசுவை ஒரு கோழையாக கருதுகின்றனர். காரணம் அவர் அன்பையும், சாந்த குணத்தையும், மனத்தாழ்மையையும் போதிக்கிறபடியாலும், சத்துருவை சினேகிக்கவும், மன்னிக்கவும் சொல்லுகிறபடியாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத, வலிமையில்லாத ஒரு கடவுள் என்று கருதுகின்றனர். அதைப்போலவே கிறிஸ்த்தவர்களையும் அநேகர் கோழை என்றே கருதுகின்றனர். உண்மையிலேயே ஒரு மனிதன் தனக்கு தீங்கு செய்யும் இன்னொரு மனிதனை மன்னிப்பானால் அது அந்த மனிதனுடைய மிகுந்த மனவலிமையையே காண்பிக்கிறது.

பழைய ஏற்பாட்டிலுள்ள மிகப்பெரிய தீர்க்கதரிசி மோசே, தேவனை முகமுகமாய் தரிசித்தவன். ஆனால் அவன் மேற்கண்ட வசனத்தில் உம்மை அறிவதற்கு உம்முடைய வழியை எனக்கு அறிவியும் என்று விண்ணப்பம் பண்ணுகிறான்.

ஒரு மனிதன் இயேசுவை நேசிக்க வேண்டுமானால், முதலாவது அவர் யார்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒருமுறை சென்னையிலுள்ள சில போதகர்கள், தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து, தங்களுக்கு ஒரு தேவாலயம் கட்ட இரண்டு கிரவுண்ட் புறம்போக்கு நிலம் தருமாறு வேண்டிக்கொண்டனர். இதற்கு தாங்கள் உயிருள்ள நாளெல்லாம் நன்றியுள்ளவர்களாய் இருப்போம் என்றனர். அதற்கு அவர் சொன்னாராம், உங்கள் தெய்வம் புறம்போக்கு தெய்வமாய் இருந்திருந்தால் நான் புறம்போக்கு நிலத்தை தந்திருப்பேன். இயேசுவோ உன்னதமான கடவுளல்லவா? அவருக்கு எப்படி நான் புறம்போக்கு நிலத்தை கொடுப்பது என்று கேள்வி எழுப்பினாராம். அப்போது அந்த போதகர்கள் வாயடைத்துபோனார்களாம். ஆம் அவருக்கு இயேசுவை குறித்த நல்ல ஒரு வெளிப்பாடு இருக்கிறது. இன்று அநேகர் இயேசுவுக்கு செல்லுபடியாக பண நோட்டுகளையும், கிழிந்து போன நோட்டுக்களையும் காணிக்கையாய் கொடுக்கும்போது அவருக்கு ஒரு மேன்மையான வெளிப்பாடு இருந்திருக்கிறது. தேவன் அவரை இன்னும் ஆசீர்வதிப்பாராக!

அதுபோல பேதுருவுக்கு பரத்திலிருந்து ஒரு வெளிப்பாடு கிடைத்தது. அநேகர் இயேசுவை எலியா என்றும் தீர்க்க தரிசிகளில் ஒருவர் என்றும் நம்பினார்கள். ஆனால் பேதுரு இயேசுவைப் பார்த்து சொன்னார் நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்த்து என்றார். ஒரு முறை பிசாசு பிடித்திருந்த ஒருவன் இயேசுவை பார்த்த போது அவனுக்குள் இருந்த பிசாசு இயேசுவைப் பார்த்து சொன்னது, நீர் உன்னதமான தேவனுடைய குமாரன் என்று. ஆம் அந்த பிசாசும் இயேசு யார் என்பதை அறிந்திருந்தது.

இன்று அநேகர் இயேசுவை குறித்து தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே வெட்கப்படுகிறோம். தைரியமாய் சினிமா நட்சத்திரங்களையும், விளையாட்டு வீரர்களையும், வாய் பேச முடியாத தெய்வங்களையும் பேசும்போது நாம் இயேசுவைக் குறித்து வெட்கப்படுவது ஏனோ? நம்மை யார் என்று தெரியாத அந்த நபரகளுக்காய் நாம் இவ்வளவு வைராக்கியம் பாராட்டுகிறோம். ஆனால் அவர்கள் நமக்கு ஒரு சிறு உதவி கூட செய்யமாட்டார்கள். மாறாக நாம் தொழுது கொள்ளுகிற போதெல்லாம் நமக்கு சமீபமாய் வந்து நமக்கு உதவி செய்யகிற இயேசு அப்பாவை குறித்து நாம் வெட்கப்பட அவர் மேற்கூறியவர்களை காட்டிலும் கேவலமானவரோ? நமக்காக ஜீவனையே தந்தது இயேசு தானே. இதற்கு காரணம் நாம் அவரைக்குறித்து அறிந்து கொள்ளாததே.

அவரை அறிந்த அநேக ராஜாக்களும், நேதாக்களும், கனவான்களும் அவரை வெட்கப்படாமல் பின்பற்றினார்கள். அவர்களெல்லாம் தேவனால் கனப்படுத்தப்பட்டார்கள். பூமியின் உயர்ந்த இடங்களில் தேவனால் அமர்த்தப்பட்டார்கள். ஆசிரியராய் இருந்து, ஜனாதிபதியாய் உயர்த்தப்பட்டவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள். ஒரு முறை அவர் குரு - சிஷ்யன் என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது உயர் குல வகுப்பை சார்ந்த ஒரு மாணவன் அவரைப்பார்த்து கேட்டார், ஐயா நான் உங்களை என்னுடைய குருவாக ஏற்றுக் கொள்ளுகிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று. அதற்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னாராம், இந்த உலகில் குருவாக இருக்க முழுதகுதியுள்ளவர் ஒரே ஒருவர் இயேசு தான். அவரை குருவாக ஏற்றுக்கொள் என்று சொன்னாராம். இந்த பதிலை அவரிடமிருந்து சற்றும் எதிர்பார்க்காத அந்த மாணவன் அப்படியே நிலை குலைந்து நின்றாராம். ஆனாலும் அந்த ஒரே ஒரு வார்த்தை அவரை பின்னாட்களில் இயேசுவண்டை திரும்ப செய்தது.

வட நாட்டில் ஒருவிசை ஒரு குடும்பத்துலுள்ள சிறு குழந்தை காணாமற்போனது. எல்லா இடங்களிலும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. அவர்களுடைய நம்பிக்கை முழுவதும் அற்றுப்போயிற்று. நாட்கள் சில கடந்து சென்றன, அப்போது அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு மிசனரி ஒருவர் இயேசுவைக் குறித்து சொன்னது ஞாபகம் வரவே, அவர்கள் இயேசுவின் உதவியை நாடினார்களாம். அவர்களுக்கு இயேசுவைப்பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாது, இருப்பினும் அவர்கள் ஜெபித்த சில மணிநேரங்களுக்குள் ஒருவர் அந்த குழந்தையுன் வந்து, பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்தார். அப்போது அவரிடம் தாங்கள் யார் என்பதை விசாரித்தனர். அதற்கு அவர், நீங்கள் யாரிடம் அந்த குழந்தையை கண்டுபிடித்து தரவேண்டுமென்று நீங்கள் விண்ணப்பம் பண்ணிநீர்களோ அவர் தான் நான் என்று சொல்லி அவர் கடந்து போய் விட்டார். அவரைக்குறித்து அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவர் வந்தபோது, அவர்களுடைய ஒரு சிறு நாய்க்குட்டி அவர் முன்பாக வந்து தன் இரண்டு முன்னங்கால்களையும் கூப்பிய படி அவர் முன்பாக அமர்ந்தது. அவர் திரும்பிபோனபின்பும் பலமணிநேரங்கள் அந்த நாய்க்குட்டி அந்த இடத்தை விட்டு அகலவே இல்லை. காரணம் அந்த நாய்க்குட்டிக்கு அங்கு வந்தது யார் என்பது தெரிந்தது, அவர் தன்னை உருவாக்கின சிருஷ்ட்டி கர்த்தா, காணக்கிடைக்காத சொக்க தங்கம் இயேசு என்பது அதற்கு தெரிந்ததினாலேயே. ஆறறிவு படைத்த மனிதன் அவரை அறியவில்லை, ஆனால் ஐந்தறிவு படைத்த அந்த நாய்க்குட்டியை நினைக்கும்போது ஆச்சர்யமாய் இருக்கிறது.

நாமும் இயேசுவை இன்னும் அறியவும், இன்னும் அவரை கிட்டிசேரவும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்து அவரை தரிசிக்கவும் பிரயாசப்படுவோம். அதற்கு வேண்டிய விஷேசித்த கிருபைகளை தேவன் எனக்கும் உங்களுக்கும் தருவாராக!

மாத்திரமல்ல நம்முடைய இதயம் இயேசுவுக்காய் துடிக்கட்டும், நம்முடைய இளம் ரத்தம் இயேசுவுக்காய் கொதிக்கட்டும். நம்முடைய உயிர் மூச்சு இயேசு என்று சுவாசிக்கட்டும். (சுவாசம் மேலிழுக்கும் போது ஏ என்றும் வெளிவிடும்போது சு என்றும் வருவது இயற்கையின் வரப்பிரசாதம். ஒரு மனிதன் சுவாசிப்பதே இயேசு என்று தான்). நமது கடைசி ஜீவன் இயேசு என்று பிரியட்டும். இயேசுவுக்காய் நம்மை சமர்ப்பிப்போம், அவரே நம்முடைய பரம பிதா. அவருக்கே இன்றும், என்றுமுள்ள சதா காலங்களிலும் மகிமையுண்டாவதாக!


Saturday, May 15, 2010

இன்று ஒரு கேள்வி – 6

இயேசுவுக்கே மகிமை


இன்று ஒரு கேள்வி – 6


தாவீது கோலியாத்தை கொன்று, வெற்றியோடு திரும்புகையில் பெண்கள் நடனமாடி; சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறை, முறையாக பாடினர். இப்படி பாடியதால் சவுல், தாவீதின் மேல் பொறாமைகொண்டான். இது சவுலுடைய ராஜ்யபார வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று. அந்த பெண்கள் பாடியது தவறா? இல்லை சவுல் புரிந்து கொண்டது தவறா? உங்கள் கருத்தை வேத வசன ஆதாரத்துடன் எழுதி அனுப்பலாம்.

1 . மேற்கண்ட கேள்விகளின் விடையை எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 21.05.2010 .


2 .
சரியான விடையை எழுதி அனுப்புவோரின் பெயர்கள் இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


3 .
இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


4 .
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail.com

5 . மறவாமல் உங்களது முழுப் பெயரையும், ஊர் பெயரையும், தாங்கள் செல்லும் சபையின் பெயரையும் குறிப்பிடவும்.

08.05.2010 அன்றைய ன்று ஒரு கேள்வி 5” க்கான சரியான விடைகள்.


யோவான் 8:56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாய் பிறப்பதற்கு, சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் ஆபிரகாம். மேற்கண்ட வசனத்தில் இயேசு சொன்னார்; ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். ஆபிரகாம் எங்கே, எப்போது இயேசுவை கண்டார்?


ஆபிரகாம் தன் ஏக சுதனும், நேச குமாரனுமாகிய ஈசாக்கை பலிபீடத்தின் மேல் கிடத்தி, அவனை பலியிட துணிந்த போது கர்த்தருடைய தூதனானவர் அவனை தடை செய்து, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் காண்பித்தார். அந்த ஆட்டுக்கடா யார் தெரியுமா? பரிசுத்த வேதம் கூறுகிறது; வெளி 5:6 இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; ஆம் அந்த ஆட்டுக்குட்டி உலக தோற்றத்திற்கு முன்பே அடிக்கப்பட்டவண்ணமாயிருந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து . ஆபிரகாம் தன் ஏக சுதனும், நேச குமாரனுமாகிய ஈசாக்கை பலியிட துணிந்த போது அவருடைய இதயம் சுக்கு நூறாய் உடைந்திருக்கும். ஆனால் ஈசாக்குக்கு பதிலாக அந்த முட்புதரில் சிக்கியிருந்த ஆட்டுகடாவை அவர் பார்த்த போது அவர் இதயம் களிகூர்ந்தது. அந்த ஆட்டுக்கடா ஈசாக்கிற்கு பதிலாக பலியிடப்பட்டது, ஆகவே ஈசாக்கு காப்பாற்றப்பட்டான். அதுபோலவே நாம் ஆக்கினைதீர்படைய வேண்டிய இடத்தில் கல்வாரி சிலுவையிலே இயேசு நமக்கு பதிலாக ஆகினைதீர்ப்படைந்தார். ஆகவே நாம் நமக்கு வரவேண்டிய தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டோம்.

கிறிஸ்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

வேதாகமத்தால் நமக்கு உண்டாகும் மேன்மை

இயேசுவுக்கே மகிமை

வேதாகமத்தால் நமக்கு உண்டாகும் மேன்மை

உலகத்தில் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகம் எது என்றால், நாம் அனைவரும் அறிந்திருக்கிறபடியே அது பரிசுத்த வேதாகமம் தான். உலகம் முழுவதிலுமாக அநேக ஆன்மீக புத்தகங்கள் இருந்தாலும் பரிசுத்த என்ற சிறப்புப் பெயரை தாங்கிய ஒரே புத்தகமும், பரிசுத்தத்தை வலியுறுத்தும் ஒரே புத்தகமும் பரிசுத்த வேதாகமம் மாத்திரமே.

தங்களுடைய ஆரம்ப காலத்தில் அல்லது துன்ப வேளைகளில் வேதாகமத்தை சுமந்த அநேகரை இந்த வேதாகமம் சுமந்திருக்கிறது.

அநேக அமெரிக்க அதிபர்கள் இந்த வேதாகமத்தை சுமந்து கொண்டு தேவாலயத்துக்கு சென்றதை தமிழ் பத்திரிகைகளில் புகைப்படம் போட்டிருந்ததை பார்த்திருந்திருக்கிறேன். வேதத்தை சுமந்த அவர்கள் உலகிலேயே மிக உன்னத பதவிகளை வகித்துள்ளனர். அவர்கள் வெட்கப்பட்டு போனதில்லை.

நம் சுதந்திரத்திற்காக போராடிய வேளையில் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் துப்பாக்கி ஏந்தாமல் சுதந்திரம் பெற முடியாது என்றார். ஆனால் நமது தேச பிதா காந்தியடிகள் சாத்வீகத்தாலும், சத்திய கிரகத்தாலும் சுதந்திரம் வாங்குவேன் என்று உறுதியாக கூறினார். ஒரு முறை பத்திரிகையாளர்கள் அவரை பேட்டியெடுத்த போது, இது எப்படி சாத்தியம் என்று கேட்டனர். அப்போது அவர் சொன்னார் மத்தேயு 5 : 5 . மத்தேயு 5 : 5 என்ன சொல்லுகிறது, சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியை சுதந்தரித்துகொள்வார்கள். ஆம் அவர் தன்னுடைய மரணத்திற்கு முன்பே சுதந்தரத்தை பெற்றார். இந்தியாவை சுதந்தரித்துகொண்டார்.

நமது முன்னாள் ஜனாதிபதி ஒருவரிடம், மாணவன் ஒருவன் கேட்டானாம் லீடர் ஷிப்பை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள நல்ல புத்தகம் எது என்று. அதற்கு அவர் சொன்ன பதில் பரிசுத்த வேதாகமத்தில் நீதி மொழிகள் என்ற ஒரு புத்தகமுண்டு, அதை படி என்று சொன்னாராம்.

நமது இந்திய நாட்டின் சட்டத்தை தொகுத்து வழங்கியவர் டாக்டர் அம்பேத்கார் அவர்கள். ஆனால் அதை எழுதியவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மெக்காலே பிரபு என்பவர். அவரிடம் இதை குறித்து பேட்டியெடுத்த போது, அவர் சொன்னார் சர்வலோக நியாதிபதியாகிய தேவன் எழுதிக்கொடுத்த பத்துக்கட்டளை களையும், நியாயபிரமாணத்தையும் வைத்து இயற்றியது தான் என்று சொன்னாராம்.

அநேக புதிய, புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவர்கள் பலர் வேதாகமத்தை படித்து அதன்படி நடந்தவர்கள். பல கண்டுபிடிப்புகள் வேதாகமத்திலிருந்தே ஐடியாக்கள் பெறப்பட்டன.

உலகிலேயே மிக நுட்பமான யுத்த தந்திரங்களை கொண்ட ராணுவம் இஸ்ரேலிய ராணுவம் ஆகும், காரணம் அவர்கள் எகிப்திலிருந்து கானானை நோக்கி புறப்பட்ட போது அவர்களை தேவனே வழிநடத்தினார். அவர்களுக்கு தேவனே பல யுத்த தந்திரங்களை கற்றுக்கொடுத்தார். இவைகள் இன்றும் வேதாகமத்திலுள்ள ராஜாக்களின் புத்தகம், நாளாகமத்தின் புத்தகம் போன்றவற்றில் நாம் பார்க்கலாம். இவைகளை பின்பற்றுவதாலே இஸ்ரேல, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாட்டின் ராணுவங்கள் சிறப்பாக உள்ளது.

போதகர் ஒருவர் மிக ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவரும் மனைவியுமாக ஜெபித்து வேதாகமத்தை வாசித்தனர். வறுமையின் உச்சகட்டம் அவர்களை வாதித்தது. தேவ ஆவியானவர் அவர்கள் வாசித்த வேத பகுதியை திரும்ப திரும்ப வாசிக்கும்படி ஏவினார். இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனாலும் திரும்ப திரும்ப வாசித்தனர். அப்போது ஆவியானவர் அவர்களுடைய வறுமை மாறி செழிப்புண்டாகுபடி ஒரு தொழில் ஆரம்பிக்கும்படியான ஆலோசனையை கொடுத்தார். அவர்கள் அன்று வாசித்த வேத பகுதி ரோமருக்கு எழுதின நிருபம் 16 வது அதிகாரம். இந்த அதிகாரம் முழுவதும் பவுல் விசுவாசிகள் ஒவ்வொருவருவருக்காக வாழ்த்து சொல்லும் அதிகாரம் ஆகும். அன்றைய நாட்களில் வாழ்த்து அட்டைகள் இல்லை. இந்த வாழ்த்துதல் அதிகாரத்தின் மூலம் தேவன் அந்த அமெரிக்க தம்பதிகளுக்கு கொடுத்த வெளிப்பாட்டின் மூலம் வந்ததுதான் வாழ்த்து அட்டைகள்.

வேதாகமத்தை நாமும் நேசித்து, அதை வாசித்து, தியானித்தால் நாமும் அறிவில் சிறந்து விளங்கலாம். மேலும் பரிசுத்தமாய் இந்த பூமியில் வாழலாம். நமக்கு வேண்டிய செழிப்பும் இதன் மூலம் நமக்கு கிடைக்கும்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

மனம் திறந்து உங்களோடு

இயேசுவுக்கே மகிமை

மனம் திறந்து உங்களோடு

மாறாதவரும், மனதுருக்கமுள்ளவருமாகிய நமது ஆண்டவரும், அருமை ரட்சகருமான இயேசுவின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!

இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சல்கள் தங்களுக்கு பிரயோஜனமாக உள்ளதா? இந்த மின்னஞ்சல்கள் யாரையும் இழிவு படுத்தவோ, புண்படுத்தவோ அல்லது பழிக்கவோ அல்ல. சில காரியங்களை வேதாகமத்துடன் ஒப்பிட்டு தெளிவு படுத்த மட்டுமே. இது மத சம்பத்தப்பட்ட மின்னஞ்சல்கள், ஆகையால் யாருடைய உணர்வுகளும் புண்படக்கூடாது என மிகுந்த கவனத்துடன் அனுப்பப்படுகிறது. ஒருவேளை நீங்கள் கிறிஸ்தவரல்லாத நண்பராக இருந்து, தொடர்ந்து நீங்கள் இந்த மின்னஞ்சல்கள் வருவதை விரும்பவில்லை என்றால் "Remove" அல்லது "Unsubscribe" என்ற Subject உடன் நீங்கள் மின்னஞ்சல் செய்தால் நாங்கள் உங்களது Mail id யை எங்களது லிஸ்டிலிருந்து Remove செய்து விடுவோம்.

நீங்கள் தமிழ் தெரியாதவராக இருந்தாலும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நாங்கள் உங்களது Mail id” யை எங்களது லிஸ்டிலிருந்து Remove” செய்துவிடுவோம். (Suppose you do not know Tamil, Kindly reply with "Remove" in the Subject Line to get off our mailing list.)

தங்களது official mail id” க்கு இந்த மின்னஞ்சல் வருவதை தாங்கள் விரும்பாவிட்டாலும், ஒன்றுக்கு மேற்ப்பட்ட தங்கள் mail id க்கு இந்த மின்னஞ்சல் வருவதாயிருந்தாலும், தயவு செய்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

தங்களது Mail id”, “Orkut” அல்லது நண்பர்கள் யாராகிலும் அனுப்பிய Mail CC” இலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். இந்த மின்னஞ்சல்களை தொடந்து அனுப்ப உங்கள் அனுமதியை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மின்னஞ்சல்களில் கூறப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும் முற்றிலும் உங்கள் சொந்த மற்றும் தனிப்பட்ட முடிவேயாகும்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்

&

...வே.வி.குழு

தடைகளை தாண்டிடுவோம்

இயேசுவுக்கே மகிமை

தடைகளை தாண்டிடுவோம்

குடியானவன் ஒருவன் கழுதை ஒன்றை வளர்த்து வந்தான். இப்போது அந்த கழுதைக்கு வயதாகி விட்டது, அதனால் அந்த கழுதையால் குடியானவனுக்கு எந்த பிரயோஜனமுமில்லாமற் போய்விட்டது. ஆகவே இந்த கழுதையை கொன்று விட தீர்மானித்தான். அதை எப்படி கொல்லலாம் என யோசித்த வனுக்கு, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் எனபது போல ஒரு யோசனை தோன்றியது. அதாவது குடியானவனுக்கு ஒரு பாழ் கிணறு ஒன்று இருந்தது. அதைக்கொண்டும் அவனுக்கு பிரயோஜனமில்லை. எனவே கழுதையை கிணற்றினுள் தள்ளி, கிணற்றை மண்ணால் மூடிவிட தீர்மானித்தான்.

மறுநாள் குடியானவன் கழுதையை கிணற்றினுள் தள்ளி, தான் நினைத்தபடியே மண்ணை அள்ளி, அள்ளி கிணற்றினுள் கொட்டினான். முதலில் கழுதை தன்னுடைய வாழ்க்கை இதோடு முடிந்தது என்று நினைத்தது. சற்று யோசித்த கழுதைக்கு ஒரு ஐடியா உதயமானது. அதாவது ஒவ்வொரு முறையும் மண்ணை அவன் கொட்டும்போது கழுதை அவற்றை உதறி தள்ளி விட்டு, அந்த மண்ணில் மேல் ஏறி நின்று விடும். இப்படி ஒவ்வொரு முறையும் நடந்தது. கடைசியாக மண் கிணற்றின் முக்கால் பகுதிக்கு வந்தவுடன் கழுதை குதித்து கிணற்றுக்கு வெளியே வந்து உயிர் பிழைத்தது.

ஆம் பிரியமானவர்களே கிறிஸ்தவ வாழ்க்கையிலும் அநேக தடைகள் வரலாம், நாம் தேவனை சார்ந்து கொண்டால் தடைகளை தாண்டிட தேவன் நமக்கு ஞானத்தை தரவும், வெற்றியை தரவும் போதுமானவர். பிசாசு நமக்கு தீமை செய்யலாம். ஆனால் தேவனோ அதே தீமையை நன்மையாக மாற்றுகிறவர். யோசப்பை எகிப்தில் அடிமை படுத்த சத்துரு திட்டம் போட்டான். அனால் அவன் தேவனுக்காய், பரிசுத்ததிற்காய் வைராக்கியம் காட்டினபடியால், தேவனும் அவனுக்காய் வைராக்கியம் பாராட்டினார். எந்த தேசத்தில் சத்துரு அவனை அடிமைப்படுத்த நினைத்தானோ, அதே தேசத்தின் சிங்காசனத்தில் அவனை உட்கார வைத்து அழகுபார்த்தார் தேவன்.

பிரியமானவர்களே பிசாசு தடைகளை கொண்டுவருகிறானா? நாம் ஒன்று செய்வோம், அந்த கழுதை மண்ணை தனக்கு படிக்கல்லாக்கி, தடைகளை தாண்டியது போல, சத்துரு நமக்கு தடையாக எதிரிட்டு வரும்போது அவனை குனிய வைத்து, அவனுடைய முதுகின் மேல் ஏறி நின்று, "யேகொவாநிசி" எங்கள் கொடி வெற்றிக் கொடி என்று பாடி சிலுவைக்கொடியை உயர்த்தி பிடிப்போம். நாம் தனியாக நின்று கொடி பிடித்தால் கொஞ்ச தூரம் மட்டுமே கொடி தெரியும். இப்போது நாம் அவனுடைய முதுகின் மேல் ஏறி நிற்பதால் சிலுவை கொடி இன்னும் அதிக தூரம் அநேகருக்கு தெரியும்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

சமாதானமுள்ள வாழ்க்கை வாழுவது எப்படி?

இயேசுவுக்கே மகிமை

சமாதானமுள்ள வாழ்க்கை வாழுவது எப்படி?

ஏசாயா 53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது;

இன்றைய உலகில் யாவருமே விரும்புவது சமாதானமுள்ள ஒரு வாழ்க்கை. மனிதன் சமாதானத்தை தேடி எங்கெங்கோ அலைகிறான். ஆனாலும் விரும்பிய சமாதானம் அநேகருக்கு கிடைத்ததாக தெரியவில்லை. காரணம் என்ன?

உலக நாடுகள் சமாதானத்துக்கான பல ஒப்பந்தங்களை செய்கின்றன. ஆனால் அவைகள் எல்லாம் ஏட்டு சுரைக்காய் போல பயனற்றதாகி விடுகின்றன. அநேக கிறிஸ்தவர்களும் குடும்ப சமாதானத்திற்காய் ஜெபிக்கிறார்கள், ஆனாலும் பலவேளைகளில் குடும்பங்களில் சமாதான குறைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியானால் சமாதானத்திற்கான வழி என்ன? வேதாகமம் என்ன சொல்லுகிறது?

ஆண்டவராகிய இயேசு சமாதானத்திற்காய் என்ன செத்தார்? சமாதானம் என்பது தானாய் வரவில்லை, இயேசு சமாதானத்தை உண்டுபண்ணினாராம். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது என்று வேதம் கூறுகிறது.

ஆம் அவர் சமாதானத்தை உண்டுபண்ணும்படி சிலுவையில் தன்னை அடித்தவர்களை, ஈட்டியால் குத்தினவர்களை, தன்னுடைய முகத்திலே உமிழ்ந்தவர்களை, முள்முடி சூட்டினவர்களை, தன்னை நிந்தித்தவர்களை மன்னித்தார், பொறுமையோடு அவைகளை சகித்தார். இதினிமித்தம் அங்கு ஒரு சமாதானம் உருவாக்கப்பட்டது. மாறாக இயேசுவும் பதிலுக்கு பதில் எதிர் தாக்குதல் நடத்தியிருந்தால், அவரும் தன்னுடைய சீஷர்களையும், தனக்கு வேண்டியவர்களையும் ஓரணியில் திரட்டி மாம்சீகமாய் போராடியிருந்தால் அன்று நூற்றுக்கணக்கானவர்கள் மரித்துப்போயிருப்பார்கள். ஆனால் இயேசுவோ தான் ஒருவராய் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு பொறுமையோடு சகித்ததினிமித்தம், தன்னுடைய ஜீவனை அவர் இழந்தார். ஆனால் அநேகருடைய ஜீவன் காப்பாற்றப்பட்டது. இதினிமித்தம் மிகப்பெரிய ஒரு சமாதானம் அன்று உருவானது.

சிலவருடங்களுக்கு முன்பு Blessing TV ல் சகோ. மோகன் சி லாசரஸ் அவர்கள் ஒரு நடந்த நிகழ்ச்சி ஒன்றை சொன்னார். அதாவது அமெரிக்க ஐக்கிய தேசத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ சகோதரி ஒருவர் நர்ஸ் ஆக பணிபுரிந்து கொண்டிருந்தார். இவர்கள் கைநிறைய சம்பாதித்தனர், ஆனால் இந்த சகோதரி சற்று அழகில் குறைந்தவர்கள். ஆனால் ஆவிக்குரிய விஷேசித்த குணம் பெற்றவர்கள். தேவ அன்பினால் நிறைந்தவர்கள்.

இவர்களது பெற்றோர் இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து, வரன் பார்க்க ஆரம்பித்தனர். ஒரு குறிப்பிட்ட வரனை தேர்வு செய்தனர். இவருக்கு வேலையில்லை, மாத்திரமல்ல இவரது மிகப்பெரிய ஆசை ஒரு முறையாகிலும் அமெரிக்க ஐக்கிய தேசத்திற்கு போய், அந்த தேசத்தை பார்க்க வேண்டுமென்பது. இதினிமித்தம் அவர் தனக்கு பிடிக்காத, அந்த அழகிற்குறைந்த அந்த நர்ஸ் சகோதரியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார்.

திருமணம் முடிந்தது. அன்று இரவே அந்த நபர் அந்த சகோதரியிடம், உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றும், தன்னுடைய அமெரிக்கா செல்லும் ஆசையினால்தான் திருமணம் செய்ததாகவும் உண்மையை ஒப்புக்கொண்டார். அந்த சகோதரியோ தேவ அன்பினால் நிறைந்த குண சாலியான ஸ்திரியல்லவா? அவர்கள் இதை தன்னுடைய பெற்றோர்களிடம் கூட சொல்லவில்லை. பொறுமையோடு சகித்துக்கொண்டார்கள். நாட்கள் சென்றன, தன்னுடைய கணவருக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் அந்த சகோதரி செய்து, அவரை அந்த தேசத்திற்கு அழைத்து சென்றார்கள். மாதங்கள் பல சென்றும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனாலும் அந்த சகோதரி பொறுமையோடு அனுதினமும் தன்னுடைய கணவனுக்கு வேண்டிய எல்லா கடமைகளையும் எந்த வெறுப்புமின்றி செய்து வந்தார்கள். ஆனால் அந்த கல்நெஞ்சு கணவனுக்கு எந்த ஒரு இரக்கமும் தன் மனைவி மேல் ஏற்படவில்லை. அந்த கணவன் தனி அறையில் தான் தங்குவார். அந்த சகோதரியோடு யாதொரு ஒட்டும் உறவுமில்லை அந்த கணவனுக்கு.

ஒருநாள் இரவு அந்த கணவனுக்கு வெகு நேரம் தூக்கம் வரவில்லை. ஆகவே எழுந்து தன்னுடைய அறையை விட்டு வெளியே வந்தார். அங்குமிங்கும் நடந்தார். தன்னுடைய மனைவி தங்கயிருந்த அந்த அறை பக்கம் போய் பார்த்தார். அந்த சகோதரி ஜெபித்துக் கொண்டிருந்தார்கள், அதை இவர் ஒட்டுக் கேட்டுகொண்டிருந்தார். ஜெபத்தின் கடைசி வேளையில் அந்த சகோதரி தன்னுடைய கணவருக்காக தேவனோடு மனதுருகி இப்படியாக ஜெபித்தார்கள். ஆண்டவரே என்னுடைய கணவனுக்கு பல மாதங்களாகியும் வேலைகிடைக்கவில்லை, அவருக்கு நல்ல ஒரு வேலை கிடைக்க உதவி செய்யுங்க ஏசப்பா. அவருக்கு என்னை பிடிக்கல, எனவே அவருக்கு பிடித்த ஒரு பெண்ணை மணமகளாக கொடுத்து வேறொரு திருமணம் நடக்கவும், அவர் சந்தோஷமாக வாழவும் உதவி செய்யுங்க ஏசப்பா என்று ஜெபித்தார்கள்.

இந்த ஜெபத்தை கேட்ட அந்த கணவனின் கல் நெஞ்சம் சுக்கு நூறாய் உடைந்தது. கண்ணீர் தாரை, தாரையாய் புரண்டோடிது. தன்னையும் அறியாமல் அழுதான். அன்று ஒரு தீர்மானமெடுத்தான். வாழ்ந்தால் ஒரே ஒரு வாழ்க்கை. அது இந்த என் மனிவியோடுதான் என்று. ஆம் அதற்கு பின்பு அவர்கள் குடும்பமாய் இணைந்து கிறிஸ்த்துவுக்குள் சமாதான, சந்தோஷத்தோடு வாழ்ந்தார்கள்.

நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கு, பஞ்சம் வந்த போது கேராரூர் என்னும் ஊரில் தங்கியிருந்த போது தேவன் அவரை ஆசீர்வதித்தார். அவர் புதிய, புதிய துரவுககளை தோண்டிய போது அங்கெல்லாம் நீர் சுரந்தது. இதினிமித்தம் பெலிஸ்தர் அவர்மேல் பொறாமைகொண்டு ஒவ்வொரு நீரூற்றையும் தூர்த்துப் போட்டார்கள். இதை நாம் ஆதியாகமம் 26 ஆம் அதிகாரத்தில் பார்க்கலாம். அவர் கடந்து வந்த பாதை ஏசேக்கு, சித்னா, ரெகொபோத், பெயெர்செபா. ஒவ்வொன்றாய் அவர்கள் தூர்த்து போட, அவரோ பொறுமையோடு அடுத்த துரவை தோண்டினார். அவர் பொறுமை காத்ததால், கடைசியில் தேவன் அவருக்காய் யுத்தம் செய்தார். கடைசியில் அவர்களுக்கு ஈசாக்கை பார்த்து பயமுண்டாயிற்று. எனவே துரவுகளை தூர்த்துபோடுவதை நிறுத்துனார்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான நண்பர்களே கிறிஸ்த்தவர்களாகிய நம்மை தேவன் ஆசீர்வதிக்கும் போது, நாம் ஒரு புதிய கார் வாங்கும்போதோ, அல்லது வீடு கட்டும்போதோ, நம்மை சுற்றிலுமுள்ளவர்கள் பொறாமை கொண்டு அவற்றை தாக்கினால் நாம் ஈசாக்கை போல பொறுமையோடு சகித்து இன்னொன்றை வாங்க முடியுமா? கிறிஸ்த்துவின் கல்வாரி அன்பு நம்மில் நிரம்பியிருந்தால் மாத்திரமே நாம் நம்முடைய சத்துருக்களை மன்னிக்கவும், அவர்களுக்காக ஜெபம் பண்ணவும், அவர்களை ஆசீர்வதிக்கவும் முடியும். இதற்கு வேண்டிய கிருபைகளை தேவன் எனக்கும், உங்களுக்கும் தருவாராக!

ஒரு விசை ஒரு போதகர் சொன்னார் ஒரு குடிகார கணவன்,அவனுக்கு அவனுடைய மனைவியை அடிப்பதுதான் வழக்கம். அதவே அவனுடைய பொழுதுபோக்கு. அந்த மனிதன் குடிபோதையில் தன்னுடைய வீட்டின் கூரையில் உள்ள ஓட்டைகள் வழியாக இரவு வேளையில் வரும் நிலா வெளிச்சத்தைப் பார்த்து, அப்பளம் என்று சொல்லி நினைத்து, தன்னுடைய மனைவியை பார்த்து சொல்லுவானாம், நீ அப்பளத்தை எல்லாம் கீழே போட்டிருக்கிறாய். எனக்கு சாப்பிட ஓன்று கூட தரவில்லை என்று சொல்லி அடிப்பானாம். அவ்வளவு குடி வெறி.

தினமும் இந்த மனிதன் குறிப்பிட்ட ஒரு மரத்திலிருந்து, இந்த சகோதரியை அடிக்க கம்பை ஒடிப்பது வழக்கம். ஒரு நாள் அந்த குறிப்பிட்ட மரத்தின் கீழ் ஒரு நாக பாம்பு ஊர்ந்து போவதை அந்த மனைவி பார்த்தாள். அவளுக்கு உடனடியாக ஞாபகம் வந்தது, தினமும் கணவன் இத மரத்தில் தான் கம்பு ஒடிக்கும்படி படி வருவார். ஒரு வேலை இரவு அவர் குடிபோதையில் வரும்போது பாம்பினால் அவருக்கு எதாகிலும் தீங்கு நேரிடலாம் என நினைத்து, அந்த சகோதரி ஒரு கம்பை ஒடித்து பத்திரமாக வைத்திருந்தால். கணவன் வேலை முடித்து வீடு திரும்பினார். தினமும் மாலைவேளையில் குடிக்க புறப்படும் வேலை வந்தது. உடனடியாக அந்த மனைவி தன்னுடைய கணவனிடம் தான் அந்த மரத்தின் கீழ் பாம்பை பார்த்ததையும், எனவே கம்பு ஒடிக்கும்படி அந்த மரத்தின் அருகே இன்று போகவேண்டாம் என்றும், தான் ஒடித்து வைத்திருந்த கம்பையும் அவரிடம் கொடுத்தார்கள். தன்னை அடிக்கும் படி தானே அந்த கம்பை ஒடித்து கொடுத்ததையும், தான் அவளை அவ்வளவு அடித்த பின்பும், அவள் தன் மீது வைத்திருந்த அன்பையும் பார்த்த அந்த கணவனின் இதயம் உடைந்தது. அன்று தான் அந்த மனிதன் தன் வாழ்நாளில் அவன் குடிக்க ஆரம்பிததிலிருது அவன் குடிக்காமலிருந்த முதல் நாள். அதன் பின்பு அந்த மனிதன் குடித்ததுவுமில்லை தன் மனைவியை அடித்ததுமில்லை. அன்பினால் தன் கணவனை ஆதாயமாக்கிகொண்டாள்.

I தெசலோனிக்கேயர் 5:15 ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.


I பேதுரு 3:9 தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.

மத்தேயு 5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.