Saturday, May 15, 2010

சமாதானமுள்ள வாழ்க்கை வாழுவது எப்படி?

இயேசுவுக்கே மகிமை

சமாதானமுள்ள வாழ்க்கை வாழுவது எப்படி?

ஏசாயா 53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது;

இன்றைய உலகில் யாவருமே விரும்புவது சமாதானமுள்ள ஒரு வாழ்க்கை. மனிதன் சமாதானத்தை தேடி எங்கெங்கோ அலைகிறான். ஆனாலும் விரும்பிய சமாதானம் அநேகருக்கு கிடைத்ததாக தெரியவில்லை. காரணம் என்ன?

உலக நாடுகள் சமாதானத்துக்கான பல ஒப்பந்தங்களை செய்கின்றன. ஆனால் அவைகள் எல்லாம் ஏட்டு சுரைக்காய் போல பயனற்றதாகி விடுகின்றன. அநேக கிறிஸ்தவர்களும் குடும்ப சமாதானத்திற்காய் ஜெபிக்கிறார்கள், ஆனாலும் பலவேளைகளில் குடும்பங்களில் சமாதான குறைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியானால் சமாதானத்திற்கான வழி என்ன? வேதாகமம் என்ன சொல்லுகிறது?

ஆண்டவராகிய இயேசு சமாதானத்திற்காய் என்ன செத்தார்? சமாதானம் என்பது தானாய் வரவில்லை, இயேசு சமாதானத்தை உண்டுபண்ணினாராம். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது என்று வேதம் கூறுகிறது.

ஆம் அவர் சமாதானத்தை உண்டுபண்ணும்படி சிலுவையில் தன்னை அடித்தவர்களை, ஈட்டியால் குத்தினவர்களை, தன்னுடைய முகத்திலே உமிழ்ந்தவர்களை, முள்முடி சூட்டினவர்களை, தன்னை நிந்தித்தவர்களை மன்னித்தார், பொறுமையோடு அவைகளை சகித்தார். இதினிமித்தம் அங்கு ஒரு சமாதானம் உருவாக்கப்பட்டது. மாறாக இயேசுவும் பதிலுக்கு பதில் எதிர் தாக்குதல் நடத்தியிருந்தால், அவரும் தன்னுடைய சீஷர்களையும், தனக்கு வேண்டியவர்களையும் ஓரணியில் திரட்டி மாம்சீகமாய் போராடியிருந்தால் அன்று நூற்றுக்கணக்கானவர்கள் மரித்துப்போயிருப்பார்கள். ஆனால் இயேசுவோ தான் ஒருவராய் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு பொறுமையோடு சகித்ததினிமித்தம், தன்னுடைய ஜீவனை அவர் இழந்தார். ஆனால் அநேகருடைய ஜீவன் காப்பாற்றப்பட்டது. இதினிமித்தம் மிகப்பெரிய ஒரு சமாதானம் அன்று உருவானது.

சிலவருடங்களுக்கு முன்பு Blessing TV ல் சகோ. மோகன் சி லாசரஸ் அவர்கள் ஒரு நடந்த நிகழ்ச்சி ஒன்றை சொன்னார். அதாவது அமெரிக்க ஐக்கிய தேசத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ சகோதரி ஒருவர் நர்ஸ் ஆக பணிபுரிந்து கொண்டிருந்தார். இவர்கள் கைநிறைய சம்பாதித்தனர், ஆனால் இந்த சகோதரி சற்று அழகில் குறைந்தவர்கள். ஆனால் ஆவிக்குரிய விஷேசித்த குணம் பெற்றவர்கள். தேவ அன்பினால் நிறைந்தவர்கள்.

இவர்களது பெற்றோர் இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து, வரன் பார்க்க ஆரம்பித்தனர். ஒரு குறிப்பிட்ட வரனை தேர்வு செய்தனர். இவருக்கு வேலையில்லை, மாத்திரமல்ல இவரது மிகப்பெரிய ஆசை ஒரு முறையாகிலும் அமெரிக்க ஐக்கிய தேசத்திற்கு போய், அந்த தேசத்தை பார்க்க வேண்டுமென்பது. இதினிமித்தம் அவர் தனக்கு பிடிக்காத, அந்த அழகிற்குறைந்த அந்த நர்ஸ் சகோதரியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார்.

திருமணம் முடிந்தது. அன்று இரவே அந்த நபர் அந்த சகோதரியிடம், உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றும், தன்னுடைய அமெரிக்கா செல்லும் ஆசையினால்தான் திருமணம் செய்ததாகவும் உண்மையை ஒப்புக்கொண்டார். அந்த சகோதரியோ தேவ அன்பினால் நிறைந்த குண சாலியான ஸ்திரியல்லவா? அவர்கள் இதை தன்னுடைய பெற்றோர்களிடம் கூட சொல்லவில்லை. பொறுமையோடு சகித்துக்கொண்டார்கள். நாட்கள் சென்றன, தன்னுடைய கணவருக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் அந்த சகோதரி செய்து, அவரை அந்த தேசத்திற்கு அழைத்து சென்றார்கள். மாதங்கள் பல சென்றும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனாலும் அந்த சகோதரி பொறுமையோடு அனுதினமும் தன்னுடைய கணவனுக்கு வேண்டிய எல்லா கடமைகளையும் எந்த வெறுப்புமின்றி செய்து வந்தார்கள். ஆனால் அந்த கல்நெஞ்சு கணவனுக்கு எந்த ஒரு இரக்கமும் தன் மனைவி மேல் ஏற்படவில்லை. அந்த கணவன் தனி அறையில் தான் தங்குவார். அந்த சகோதரியோடு யாதொரு ஒட்டும் உறவுமில்லை அந்த கணவனுக்கு.

ஒருநாள் இரவு அந்த கணவனுக்கு வெகு நேரம் தூக்கம் வரவில்லை. ஆகவே எழுந்து தன்னுடைய அறையை விட்டு வெளியே வந்தார். அங்குமிங்கும் நடந்தார். தன்னுடைய மனைவி தங்கயிருந்த அந்த அறை பக்கம் போய் பார்த்தார். அந்த சகோதரி ஜெபித்துக் கொண்டிருந்தார்கள், அதை இவர் ஒட்டுக் கேட்டுகொண்டிருந்தார். ஜெபத்தின் கடைசி வேளையில் அந்த சகோதரி தன்னுடைய கணவருக்காக தேவனோடு மனதுருகி இப்படியாக ஜெபித்தார்கள். ஆண்டவரே என்னுடைய கணவனுக்கு பல மாதங்களாகியும் வேலைகிடைக்கவில்லை, அவருக்கு நல்ல ஒரு வேலை கிடைக்க உதவி செய்யுங்க ஏசப்பா. அவருக்கு என்னை பிடிக்கல, எனவே அவருக்கு பிடித்த ஒரு பெண்ணை மணமகளாக கொடுத்து வேறொரு திருமணம் நடக்கவும், அவர் சந்தோஷமாக வாழவும் உதவி செய்யுங்க ஏசப்பா என்று ஜெபித்தார்கள்.

இந்த ஜெபத்தை கேட்ட அந்த கணவனின் கல் நெஞ்சம் சுக்கு நூறாய் உடைந்தது. கண்ணீர் தாரை, தாரையாய் புரண்டோடிது. தன்னையும் அறியாமல் அழுதான். அன்று ஒரு தீர்மானமெடுத்தான். வாழ்ந்தால் ஒரே ஒரு வாழ்க்கை. அது இந்த என் மனிவியோடுதான் என்று. ஆம் அதற்கு பின்பு அவர்கள் குடும்பமாய் இணைந்து கிறிஸ்த்துவுக்குள் சமாதான, சந்தோஷத்தோடு வாழ்ந்தார்கள்.

நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கு, பஞ்சம் வந்த போது கேராரூர் என்னும் ஊரில் தங்கியிருந்த போது தேவன் அவரை ஆசீர்வதித்தார். அவர் புதிய, புதிய துரவுககளை தோண்டிய போது அங்கெல்லாம் நீர் சுரந்தது. இதினிமித்தம் பெலிஸ்தர் அவர்மேல் பொறாமைகொண்டு ஒவ்வொரு நீரூற்றையும் தூர்த்துப் போட்டார்கள். இதை நாம் ஆதியாகமம் 26 ஆம் அதிகாரத்தில் பார்க்கலாம். அவர் கடந்து வந்த பாதை ஏசேக்கு, சித்னா, ரெகொபோத், பெயெர்செபா. ஒவ்வொன்றாய் அவர்கள் தூர்த்து போட, அவரோ பொறுமையோடு அடுத்த துரவை தோண்டினார். அவர் பொறுமை காத்ததால், கடைசியில் தேவன் அவருக்காய் யுத்தம் செய்தார். கடைசியில் அவர்களுக்கு ஈசாக்கை பார்த்து பயமுண்டாயிற்று. எனவே துரவுகளை தூர்த்துபோடுவதை நிறுத்துனார்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான நண்பர்களே கிறிஸ்த்தவர்களாகிய நம்மை தேவன் ஆசீர்வதிக்கும் போது, நாம் ஒரு புதிய கார் வாங்கும்போதோ, அல்லது வீடு கட்டும்போதோ, நம்மை சுற்றிலுமுள்ளவர்கள் பொறாமை கொண்டு அவற்றை தாக்கினால் நாம் ஈசாக்கை போல பொறுமையோடு சகித்து இன்னொன்றை வாங்க முடியுமா? கிறிஸ்த்துவின் கல்வாரி அன்பு நம்மில் நிரம்பியிருந்தால் மாத்திரமே நாம் நம்முடைய சத்துருக்களை மன்னிக்கவும், அவர்களுக்காக ஜெபம் பண்ணவும், அவர்களை ஆசீர்வதிக்கவும் முடியும். இதற்கு வேண்டிய கிருபைகளை தேவன் எனக்கும், உங்களுக்கும் தருவாராக!

ஒரு விசை ஒரு போதகர் சொன்னார் ஒரு குடிகார கணவன்,அவனுக்கு அவனுடைய மனைவியை அடிப்பதுதான் வழக்கம். அதவே அவனுடைய பொழுதுபோக்கு. அந்த மனிதன் குடிபோதையில் தன்னுடைய வீட்டின் கூரையில் உள்ள ஓட்டைகள் வழியாக இரவு வேளையில் வரும் நிலா வெளிச்சத்தைப் பார்த்து, அப்பளம் என்று சொல்லி நினைத்து, தன்னுடைய மனைவியை பார்த்து சொல்லுவானாம், நீ அப்பளத்தை எல்லாம் கீழே போட்டிருக்கிறாய். எனக்கு சாப்பிட ஓன்று கூட தரவில்லை என்று சொல்லி அடிப்பானாம். அவ்வளவு குடி வெறி.

தினமும் இந்த மனிதன் குறிப்பிட்ட ஒரு மரத்திலிருந்து, இந்த சகோதரியை அடிக்க கம்பை ஒடிப்பது வழக்கம். ஒரு நாள் அந்த குறிப்பிட்ட மரத்தின் கீழ் ஒரு நாக பாம்பு ஊர்ந்து போவதை அந்த மனைவி பார்த்தாள். அவளுக்கு உடனடியாக ஞாபகம் வந்தது, தினமும் கணவன் இத மரத்தில் தான் கம்பு ஒடிக்கும்படி படி வருவார். ஒரு வேலை இரவு அவர் குடிபோதையில் வரும்போது பாம்பினால் அவருக்கு எதாகிலும் தீங்கு நேரிடலாம் என நினைத்து, அந்த சகோதரி ஒரு கம்பை ஒடித்து பத்திரமாக வைத்திருந்தால். கணவன் வேலை முடித்து வீடு திரும்பினார். தினமும் மாலைவேளையில் குடிக்க புறப்படும் வேலை வந்தது. உடனடியாக அந்த மனைவி தன்னுடைய கணவனிடம் தான் அந்த மரத்தின் கீழ் பாம்பை பார்த்ததையும், எனவே கம்பு ஒடிக்கும்படி அந்த மரத்தின் அருகே இன்று போகவேண்டாம் என்றும், தான் ஒடித்து வைத்திருந்த கம்பையும் அவரிடம் கொடுத்தார்கள். தன்னை அடிக்கும் படி தானே அந்த கம்பை ஒடித்து கொடுத்ததையும், தான் அவளை அவ்வளவு அடித்த பின்பும், அவள் தன் மீது வைத்திருந்த அன்பையும் பார்த்த அந்த கணவனின் இதயம் உடைந்தது. அன்று தான் அந்த மனிதன் தன் வாழ்நாளில் அவன் குடிக்க ஆரம்பிததிலிருது அவன் குடிக்காமலிருந்த முதல் நாள். அதன் பின்பு அந்த மனிதன் குடித்ததுவுமில்லை தன் மனைவியை அடித்ததுமில்லை. அன்பினால் தன் கணவனை ஆதாயமாக்கிகொண்டாள்.

I தெசலோனிக்கேயர் 5:15 ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.


I பேதுரு 3:9 தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.

மத்தேயு 5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

இன்று ஒரு கேள்வி – 5

இயேசுவுக்கே மகிமை


இன்று ஒரு கேள்வி – 5


யோவான் 8:56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாய் பிறப்பதற்கு, சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் ஆபிரகாம். மேற்கண்ட வசனத்தில் இயேசு சொன்னார்; ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். ஆபிரகாம் எங்கே, எப்போது இயேசுவை கண்டார்? உங்கள் கருத்தை வேத வசன ஆதாரத்துடன் எழுதி அனுப்பலாம்.


1 . மேற்கண்ட கேள்விகளின் விடையை எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 14.05.2010 .


2 .
சரியான விடையை எழுதி அனுப்புவோரின் பெயர்கள் இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


3 .
இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


4 .
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail.com

5 . மறவாமல் உங்களது முழுப் பெயரையும், ஊர் பெயரையும், தாங்கள் செல்லும் சபையின் பெயரையும் குறிப்பிடவும்.


24.04.2010 அன்றைய இன்று ஒரு கேள்வி 4” க்கான சரியான விடைகள்.

சங்கீதம் 115:16 வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார். மேற்கண்ட வசனத்தின்படி பூமி மாத்திரமே மனுஷனுடைய குடியிருப்புக்காக தேவன் நியமித்திருக்கிறார். ஆனால் விஞ்ஞானிகளோ சந்திரனில் மனிதன் வாழ முடியுமென கருதி அங்கு குடியிருப்புகளை கட்ட முயற்சிக்கிறார்கள். இது சத்தியமா? மனிதன் சந்திரனில் வாழ முடியுமா?


தற்போது விஞ்ஞானிகள் தீவிரமாக விண்ணில் குடியிருப்புகள் கட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால் பரிசுத்த வேதம் கூறுகிறது, ஒபதியா 1:4 நீ கழுகைப்போல உயரப்போனாலும் நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேனென்று கர்த்தர் சொல்லுகிறார்,


ஆரம்பத்தில் இந்த முயற்சிகள் வெற்றிபெறலாம். மனிதன் தற்போது நிலவில் பனிக்கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளான். இதை தண்ணீராக மாற்றி, தண்ணீரை இரண்டாக பிரித்து அதாவது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாக பிரித்து, அந்த ஆக்சிஜனை சுவாசிக்க பயன்படுத்தலாம் என்பது விஞ்ஞானிகளின் திட்டம்.


எரேமியா 49:16 நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


ஆனால் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்க தரிசனமாக தேவன் வேதாகமத்தில் எழுதி வைத்துள்ளார், கடைசிகாலத்தில் சந்திரன் ரத்தமாய் மாறும் என்று. சந்திரன் ரத்தமாய் மாறினால் அங்கு உள்ள பனிக்கட்டிகளில் வித்தியாசம் உண்டாகி அதை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாக மாற்ற முடியாமல் போகலாம். இதினிமித்தம் அங்கு வாழ முடியாத சூழ்நிலை உருவாகலாம்.


அப்போஸ்தலர் 2:20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

வெளி 6:12 அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று.

எது எப்படியோ விண்ணில் வீடு கட்டி நிரந்தரமாக வாழமுடியாது என்பது மட்டும் திண்ணம்.


கிறிஸ்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

பயோ டேட்டா - 1

இயேசுவுக்கே மகிமை

பயோ டேட்டா - 1

1

பெயர்

சாத்தான்

2

வயது

சில ஆயிரம்

3

தொழில்

நல்ல மனிதர்களை பாவிகளாய் மாற்றுவது

4

நேசிப்பது

பாவத்தில் வாழ்பவர்களை

5

வெறுப்பது

பரிசுத்தம்

6

எதிரி

இயேசுவும், பரிசுத்தமாய் வாழும் தேவ பிள்ளைகளும்

7

லட்சியம்

மனிதர்கள் பரலோகம் செல்லக் கூடாது என்பது

8

தகுதி

எதற்கும் லாயக்கற்றவன்

9

சிறப்பு பெயர்கள்

மனித கொலை பாதகன், அழுகி போன கிளை,

10

சிறப்பு

விடா முயற்சி (மனிதர்களை கெடுக்க)

11

வேறு பெயர்கள்

பிசாசு, பேலியாளின் மகன்

12

சாதனை

கோடிக்கணக்கான மனிதர்களை பாதாளத்திற்கு வழிநடத்தியது

13

மிகவும் வேதனை பட்ட நேரம்

தேவன் பரலோகத்திலிருந்து தள்ளியபோது

14

உயர்வு

நித்திய நரகம்


கிறிஸ்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

Wednesday, May 5, 2010

அன்பு தம்பிக்கு ஓர் மடல்

இயேசுவுக்கே மகிமை

அன்பு தம்பிக்கு ஓர் மடல்

தம்பி உன் கடிதம் கிடைத்தது. உனக்கு அரசினர் மருத்துவக் கல்லூரியில் Admission கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நம்முடைய அப்பாவின் நீண்ட நாள் கனவை நீ நனவாக்கியுள்ளாய். உனக்கு என் வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்ளுகிறேன்.

தம்பி நீ எல்லாவற்றையும் பற்றி எழுதியுள்ளாய், ஆனால் உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையையும், உன் பரிசுத்தத்தையும், தேவனோடு உள்ள உன் ஐக்கியத்தும் குறித்து நீ எழுதாதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தேவன் இவ்வளவாய் உன்னோடு கூட இருந்து, நம்முடைய ஏழ்மை நிலையிலும் உனக்கு படிக்க வாய்ப்பை தந்து, நல்ல மதிப்பெண்களுடன் வெற்றிபெற செய்த தேவன் இயேசுவை மறந்து போனாயோ?

நீ விடுதியில் தங்கி படிப்பதை உன் கடிதம் வாயிலாக தெரிந்து கொண்டேன். இது சற்று எனக்கு மனக்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகிங் பற்றிய கவலைதான், ஆனாலும் ஜெபித்துக்கொள், தேவன் உன்னை எல்லா தீங்கிற்கும் விலக்கி பாதுகாத்துக் கொள்வார்.

தம்பி நீ விடுதியில் படிப்பதால் உனக்கு சில அறிவுரைகளை கூறுவது நலம் பயக்குமென கருதுகிறேன். I தீமோத்தேயு 4:12 உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு சக மாணவர்களுக்கு மாதிரியாயிரு. மேற்கண்ட வசனத்தின் படி உன்னை காத்துக்கொள்.

கல்லூரி விடுதியில் இயேசுவை அறியாத உன் நண்பர்கள் உன்னை, உன்னுடைய பரிசுத்தை குலைக்கும் பலவித கதை புத்தகங்களை படிக்கவும், சினிமா பார்க்கவும், பீடி, சிகரெட் பிடிக்கவும் உன்னை வற்புறுத்தலாம். இவைகளுக்கு உன்னை விலக்கி பாதுகாத்துக்கொள். மேலும் எதிர் பாலினரோடு பழகும் போது, ஜாக்கிரதையாயிரு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சற்று (இரண்டடி) தள்ளி நின்று பேசு. இது உன்னுடைய பரிசுத்தத்தை நீ பாதுகாத்துக்கொள்ள உனக்கு உதவியாயிருக்கும். I தீமோத்தேயு 5:2 முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும், பாவித்து, நடந்துகொள்.

எல்லா சூழ்நிலைகளிலும் இயேசுவையும், யோசப்பு, தானியேல் போன்றோர்களையும் உன்னுடைய ரோல் மடலாக வைத்துக்கொள். உன்னுடைய பாவ சூழ்நிலைகளில் இயேசுவை நினைத்துப்பார், அவர் லாசருவின் சகோதரிகளாகிய மரியாள், மார்த்தாள் மற்றும் சமாரியா ஸ்திரீ போன்றோர்களிடம் (சகோதரிகளைப் போன்று) எப்படி பழகினார் என்பதையும், யோசேப்பு போத்திபாருடைய மனைவியிடத்திளிருந்து எப்படி தன்னை பாவத்திலிருந்து பாதுகாத்தார் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்.

வகுப்பறையில் ஆசிரியர்களை கிண்டல் செய்யும் மாணவர்களோடு சேர்ந்துவிடாதே. பாடங்களை நன்கு கவனித்து நன்றாக படித்து அப்பாவின் கனவை நனவாக்கு. மேலும் நீ Free யாக இருக்கும் போது உன்னிலும் சற்று ஞானத்தில் குறைவுள்ள நண்பர்களுக்கு பாடங்களை புரியும்படி கற்றுக்கொடு. தேவன் அதற்கேற்ற பிரதிபலனை பினாட்களில் உனக்கு தருவார். மேலும் Exam களில் ஒருபோதும் காப்பியடிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்யாதே. உன்னுடைய படிப்பு மனித உயிர்களோடு சம்பந்த்தப்பட்டது. எனவே இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாயிரு.

மேலும் உன்னுடைய நண்பன் John Civil Engg . படிக்கிறான், அவனிடமும் இதைப்பற்றி சொல். ஆரம்பத்தில் Basic தெரியாமல் காப்பியடித்துப் படித்தால் அவனுக்கு Civil Engg . பற்றிய சரியான Foundation இல்லாமல் போய்விடும். கடைசியில் அவன் ஒரு வீடு கட்ட Foundation போட்டால் எப்படியிருக்கும் என்பதை நினைத்துப்பார்.

நம்முடைய விவசாயம் தேவனுடைய கிருபையால் நன்றாக உள்ளது. இந்த வருடம் அமோக விளைச்சல் இருக்கும் என தேவனில் விசுவாசிக்கிறேன். இங்கு மழையில்லாமல் மிகுந்த வறட்சியாக உள்ளது. ஆனாலும் நானும், அப்பாவும் முழு மூச்சுடன் தண்ணீர் பாய்ச்சுவதில் கவனம் செலுத்துகிறோம். நீ எதைப்பற்றியும் கவலைப்படாமல், உன்னுடைய படிப்பில் கவனம் செலுத்து. மற்றவை நேரில்.

இப்படிக்கு,
உன் நலம் விரும்பும் அண்ணன்,
டேவிட்.

II தீமோத்தேயு 4:2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

இலக்கை நோக்கி

இயேசுவுக்கே மகிமை

இலக்கை நோக்கி

பிலிப்பியர் 3:14 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

ஒலிம்பிக் போட்டி என்பது விளையாட்டு உலகின் மிகப்பெரிய கனவு உலகு ஆகும். ஒலிபிக் போட்டி பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது. ஆரம்ப காலங்களில் வெற்றி பெறுவோருக்கு ஒலிவ இலைகளாலான கிரீடம் சூட்டப்பட்டது.

I கொரிந்தியர் 9:24 பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக கேரளாவை சேர்ந்த சைனி வில்சன் என்ற ஓட்ட பந்தய வீராங்கனை, நமது இந்திய நாட்டின் சார்பாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார்கள். போட்டி ஆரம்பமானது, சைனி வில்சன் அதிவேகமாக ஓடி முன்னிலையில் ஓடி கொண்டிருந்தார். கரவொலி விண்ணை பிளக்க, ரசிகர்கள் உற்சாக மூட்ட முதன்மையாக வந்து தன் இலக்கை தொட்டுவிட்டார். ரசிகர்களுக்கு மிகப்பயங்கர சந்தோசம், அதை விட சைனி வில்சனுக்கோ தாங்க முடியாத சந்தோசம். நடுவர் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டார். அந்தோ பரிதாபம், சைனி வில்சனின் பெயர் பட்டியலில் இல்லை. இமைப்பொழுதில் அவருடைய சந்தோசம் பறிபோனது. மார்பிலடித்து கதறி அழுதார். ஏன், ஏன் என்று அழுது புலம்பினார். நடுவர்கள் அவர் ஓடிய போது எடுத்த வீடியோவை போட்டுக் காண்பித்தார்கள். அவர்கள் அவருக்கு கொடுக்கப்பட்ட அந்த Track யை விட்டு அவர்கள் விலகி ஓடியது தெளிவாக காண்பிக்கப்பட்டது. அவர்கள் முதலாவதாக தன் இலக்கை அடைந்தும், அவர்களால் வெற்றி வாகை சூட முடியாமல் போனது.


I கொரிந்தியர் 9:25 பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.

பொதுவாகவே எந்த ஒரு விளையாட்டில் பங்கு பெறுவோராக இருந்தாலும், அவர்களுக்கு பலவிதமான கட்டுபாடுகள் இருக்கும். அதாவது அவர்களுக்கு உணவு கட்டுப்பாடுகள், தூங்குவதில் கட்டுபாடுகள் உண்டு. மேலும் அவர்கள் சரியான அளவில் உடல் பயிற்சிகள், அதோடு கூட அவர்கள் எந்த விளையாட்டில் பங்குபெறுகிறார்களோ அந்த விளையாட்டில் சரியான பயிற்சி இருந்தால் மட்டுமே அவர்கள் வெற்றி பெற முடியும்.


ஆம் கிறிஸ்த்தவ உலகிலும் கண்களின் இச்சை, மாசத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இந்த மூன்றையும் வென்றால் தான் பரம அழைப்பின் பந்தய பொருளை நாம் பெற்று கொள்ள முடியும்.


பிலிப்பியர் 3:14 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

ஆம் கிறிஸ்தவ உலகிலும் ஒரு இலக்கு உண்டு. சரியான முறையில் ஓடி அந்த இலக்கை அடைந்தால் மட்டுமே நாம் பரிசு பொருளை பெற முடியும். இதை எழுதிக் கொண்டிருக்கிற எளியவனும் மிகவும் நடுக்கத்துடனேயே எழுதுகிறேன். யார் வேண்டுமானாலும் எழுதலாம், யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் எழுதுகிறபடியும், பேசுகிறபடியும் வாழ்ந்து காட்டுவதே சாதனை.

கிறிஸ்தவ உலகிலும் பல இலக்கு உண்டு. ஆனால் இன்று பலர் இலக்கு தெரியாமல் அல்லது தவறான இலக்குகளில் ஓடுகிறார்கள் என்பதை கண்ணீரோடு கூட இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது தேவன் பழைய ஏற்ப்பாட்டில் விருத்த சேதனம் என்ற ஒன்றை கட்டளையிட்டதுபோல, புதிய எற்ப்பாட்டிலும் ஞானஸ்நானம் என்ற ஒன்றை கட்டளையிட்டுருக்கிறார். இது ஞானம் + ஸ்நானம், அதாவது அறிவு வந்த பின் தண்ணீரில் இறங்கி முழுகி எடுப்பது தான் வேதாகமம் நமக்கு நியமித்திருக்கிற ஞானஸ்நானம். ஆனால் இதை பலர் (குழந்தை ஸ்நானம், தெளிப்பு ஸ்நானம்) செய்து இலக்கை சிறு குழந்தையிலேயே முதலாவதாக அடைந்தாலும், இது தவறாக Track மாறி நாம் அடையும் இலக்கு ஆகும்.

மத்தேயு 3:16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

மாற்கு 1:10 அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.

தேவனை ஆராதிப்பதில் ஒரு இலக்கு உண்டு, தூய ஆவியானவரின் வல்லமையை பெற்று கொள்வதில் ஒரு இலக்கு உண்டு. நாம் உடைகள் அணிவதில் ஒரு சரியான இலக்கு உண்டு. உபாகமம் 22:5 புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.

கொலோசெயர் 2:19 மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து ஒருவரே ஆராதனைக்கு பாத்திரர். அவரையன்றி வேறொருவரையும் நாம் ஆராதிக்கக் கூடாது, அது தேவ தூதர்களானாலும் சரி. மகா பரிசுத்தமுள்ளவரும், நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், தாம் ஒருவராய் பெரிய அதிசயங்களை செய்கிறவருமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து ஒருவரே சகல கனத்திற்கும், மகிமைக்கும், புகழ்ச்சிக்கும், ஆராதனைக்கும் பாத்திரர்.

II திமோத்தேய:7. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.

8.
இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

Tuesday, May 4, 2010

என்னுடைய மிகப்பெரிய தவறு

இயேசுவுக்கே மகிமை

என்னுடைய மிகப்பெரிய தவறு

நான் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றிபெற்றதால் எனக்கு அரசினர் பொறியியற்கல்லூரியில் எளிதாக Admission கிடைத்தது. ஆனால் என்னுடைய உயிர் நண்பனுக்கு குறைவான மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால் அவனால் பொறியியற்கல்லூரியில் சேருவது மிகவும் கடினமாயிற்று. அவன் என்னை பார்த்தபோது எதாகிலும் கல்லூரியில் seat இருந்தால் அவனுக்கு தெரிவிக்கும் படி என்னை கேட்டிருந்தான். சில மாதங்கள் சென்ற பின்பு புதிய ஒரு கல்லூரியில் சில காலியிடங்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். அனால் அதை நான் நண்பனிடம் தெரிவிக்கவில்லை, அவன் ஏதாவது கல்லூரியில் சேர்ந்திருப்பான் என்று நினைத்தேன். ஆறுமாதங்கள் சென்ற பின்பு அந்த நண்பனை சந்தித்தேன். அவன் எந்த கல்லூரியிலும் இடம் கிடைக்காததால் தனக்கு ஒரு ஆண்டுகள் வீணாகிவிட்டது என்று அவன் சொல்லி வேதனைப்பட்ட போது என் இதயத்தில் குத்தப்பட்டேன். ஒரே ஒரு ரூபாய் செலவு பண்ணி நான் ஒரு Phone பண்ணி சொல்லியிருந்தால் அவனுக்கு ஒரு ஆண்டு வீணாய் போனதை நான் தடுத்திருந்திருக்கலாம்.

நான் பொறியியற்கல்லூரியில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றிபெற்று campus interview ல் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் நல்ல வேலையில் அமர்ந்தேன். சுமார் ஒரு வருடங்கள் சென்ற பின் என் கல்லூரி தோழன் ஒருவன் தனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்றும், எதாகிலும் கம்பெனியில் openings இருந்தால் தனக்கு inform பண்ணுபடி எனக்கு மெயில் பண்ணியதோடு, தன்னுடைய Resume யும் அனுப்பியிருந்தான். சுமார் ஆறு மாதங்கள் சென்ற பின்பு ஒரு பன்னாட்டு நிறுவனமொன்றில் அவனுடைய profile match ஆகுவதுபோல ஒரு opening இருப்பதை கேள்விப்பட்டேன். என்னுடைய பணி சுமையின் காரணமாக என்னுடைய நண்பனுக்கு நான் அதை தெரிவிக்க மறந்துவிட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு அந்த நண்பனை மீண்டும் சந்தித்தேன். அவன் இன்னும் வேலையில்லாமன் ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கண்ணீரோடு அவன் தன் சூழ்நிலையை சொன்னபோது என் இதயம் கனத்தது. அன்று நான் ஒரு நிமிடம் செலவு செய்து என் நண்பனுக்கு அந்த openings இருந்ததை சொல்லியிருந்தால் அவன் இன்று நல்ல ஒரு நிலையில் இருந்திருப்பான்.

வருடங்கள் சென்றன. ஒரு நாள் இரவு நான் நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென என்னுடைய கல்லூரி ஜூனியர் நண்பன் ஒருவன் அலறிதுடித்துக்கொண்டு, ஐயோ! ஐயோ! தாங்கமுடியலியே. ஐயோ! தீயில் வேகிறேனே! அண்ணன் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தும் ஒரு நாள் கூட எனக்கு இயேசுவை பற்றி சொல்லவில்லையே! ஐயோ அண்ணன் என்னால் தாங்க முடியலியே. என்னுடைய தாகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கவில்லயே. புழுக்களும், பாம்புகளும் என்மேல் ஊர்ந்து செல்லுகின்றது என்று கதறினான். அண்ணன் நீங்கள் ஒரு வார்த்தை இயேசுவைப் பற்றி சொல்லியிருந்தால் நான் இந்த கொடிய அக்னிகடலுக்கு தப்பியிருந்திருப்பேனே என்று அழுது புலம்பினான். திடீரெனே தூக்கம் கலைய விழித்துக்கொண்டேன். அப்போது அது கனவு என்பதை உணர்ந்தேன். ஆனாலும் அந்த நண்பனின் கொடிய அலறல் சத்தம் என் காதுகளை விட்டு ஓயவில்லை.

சில மாதங்கள் சென்ற பின்பு நான் தங்கையின் திருமணத்திற்க்காக என் சொந்த ஊருக்கு சென்ற போது அவனுடைய, நெருங்கிய கல்லூரி தோழன் ஒருவனை பார்த்தேன். உடனடியாக அந்த கொடிய அழுகையின் சத்தம் என் காதுகளில் தொனித்தது. உடனடியாக அந்த நண்பனை பற்றி அவனிடம் விசாரித்தேன். அப்போது அவனுடைய கண்கள் கலங்கியது, அவனுடைய வாய்கள் தடுமாறியது, அவன்... அவன் ... மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கொடிய மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாய் மரித்துப் போனதாக சொன்னான். அப்போது எனக்கு புரிந்தது, அவன் நரகத்திற்கு சென்றது. என் இதயம் சுக்கு நூறாய் உடைந்தது. நான் செய்த மிகப்பெரிய தவறு நான் அவனுக்கு ஒரு முறை கூட இயேசுவின் அன்பையும், அவருடைய பாவமன்னிப்பையும் அவனுக்கு சொல்லாதது. நான் என்னுடைய பல நண்பர்களுக்கு இயேசுவை சொல்லியிருக்க்றேன். ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து என்னை கோமாளியாய் பார்ப்பார்கள். அதினிமித்தம் நான் பின்னாட்களில் யாருக்கும் இயேசுவைப் பற்றி அறிவிப்பதில்லை.

கிறிஸ்த்துவுக்குள் அன்பு நண்பர்களே பரிசுத்த வேதம் சொல்லுகிறது; பிரசங்கி 11:8 மனுஷன் அநேக வருஷம் ஜீவித்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாயிருந்தாலும், அவன் இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாயிருக்கும்; வந்து சம்பவிப்பதெல்லாம் மாயையே.

ஆம் நாம் உயிரோடு வாழும் நாட்களில், நம் உயிர் பிரிந்த பின்பு நரகம், பரலோகம் என்று இருப்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நரகத்திற்கு தப்பும் வழியை நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டும். ஆகவே தான் இயேசு சொன்னார்; யோவான் 14:6 நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் (பரலோகிற்கு) வரான்.

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.