Thursday, April 29, 2010

பனையைப் போல

இயேசுவுக்கே மகிமை

பனையைப் போல

சங்கீதம் 92:12 நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

சங்கீதக்காரன் நீதிமானுக்கு வரும் ஆசீர்வாதம் எப்படியிருக்குமென சொல்லும்போது, பனையைப் போல செழித்து வளருவான் என்று கூறுகிறார். ஏன் அவர் பனையைப் ஒப்பிட்டு சொல்லியிருப்பார் என்றால் பனை மணற்ப்பாங்கான இடத்தில் வளரும். மட்டுமல்ல பனை மரத்திற்கு யாரும் தண்ணீர் ஊற்றியோ அல்லது உரமிட்டோ வளர்ப்பதில்லை. அது இயற்கையாகவே தேவன் வைத்துள்ள சூரிய வெளிச்சத்தைக்கொண்டு அது தானாகவே செழித்து வளரும். அது மற்ற எந்த ஒருவருடைய தயவையும் நாடி அல்லது கை ஏந்தியும் நிற்பதில்லை.

பிரியமானவர்களே நாமும் பரிசுத்தமாய் வாழ்ந்து, நீதிமான் என்ற பாக்கியத்தைப் பெற்றால் நாமும் யாருடைய தயவையும் நாடவேண்டியதில்லை, யார் முன்பும் கை கட்டி நிற்க வேண்டியதுமில்லை. பரிசுத்த வேதம் கூறுகிறது, ஏசாயா 60:3 உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள் என்று. ஆம் யோசேப்பு, தானியேல் போன்றோர்களுடைய தயவு ராஜாக்களுக்கு தேவைப்பட்டதேயொழிய, இவர்கள் ராஜாகளுக்கு முன்பு கைகட்டி நிற்கவில்லை. யாருமே நமக்கு உதவி செய்யாவிட்டாலும், ஒரு வேளை சூரியனும், சந்திரனும் கூட நம்மை மறந்து போனாலும் கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்.

ஏசாயா 60:19 இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.

ஏசாயா 60:20 உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.

உங்கள் யாவருக்கும் எங்கள் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!

இந்த நல்ல நாளில் ஆண்டவராகிய இயேசு தாமே பரத்திலிருந்து நமக்கு ஒத்தாசை அனுப்பி, நாம் செய்யும் வேலையை சிறப்பாகவும், நேர்த்தியாகவும் யாரும் குறை கண்டுபிடிக்க முடியாதவண்ணம் செய்ய வேண்டிய ஞானத்தையும், புத்தியையும், அறிவையும் தேவையான சரீர சுகத்தையும், தெவீக சமாதானத்தையும் நமக்கு தருவாராக!

தேவன் நம்மை வற்றாத நீரூற்றைப்போலவும், பரவிபாய்கிற ஆறுகளைப்போலவும், பூத்துக்குலுங்கும் வளமிக்க தோட்டத்தைப்போலவும் ஆசீர்வதிப்பாராக!

உபாகமம் 28:12 ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய். நீயோ கடன் வாங்காதிருப்பாய்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்,

&

இ.ஒ.த.வே.வி.குழு.

No comments:

Post a Comment