இயேசுவுக்கே மகிமை
எதிர்நீச்சல்
லேவியராகமம் 11:9 ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்; கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
லேவியராகமம் 11:10 ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
பரிசுத்த வேதாகமத்தில், தண்ணீரில் நீந்துகிற ஜீவ ஜந்துக்களில் (மீன்களில்) புசிக்கத்தக்கது எது, புசிக்க தகாதது எது என்று மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதாவது சிறகும், செதிளும் உள்ள எல்லா மீன்களும் புசிக்க தகுந்தது. சிறகும் செதிளும் இல்லாத மீன்கள் புசிக்க தகாதது, மட்டுமல்ல இவைகள் அருவருப்பானவைகள். இந்த இரண்டு வகையான மீன்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உள்ளன.
சிறகுள்ள மீன்களால் யோர்தான் நதி கரைபுரண்டோடினாலும், எதிர் நீச்சல் அடித்து தடைகளை தாண்டும் குணாதிசயம் உண்டு. எனவே இவைகளால் ஆழமான பகுதிகளிலும், தண்ணீரோட்டம் உள்ள பகுதிகளிலும் இலகுவாய் வாழ முடியும். ஆனால் சிறகும், செதிளும் இல்லாத மீன்களால் எதிர் நீச்சலிடிக்க முடியாது. எனவே இவைகள் தண்ணீரோட்டம் இல்லாத, ஆழமற்ற கரைபகுதிகளில் உள்ள சேற்றில் மறைந்து வாழ்ந்து, அந்த சேற்றில் உள்ள அசுத்தங்களை உண்டு உயிர் வாழ்கின்றன.
மேற்கண்ட இரண்டு விதமான மீன்களையும், இந்த உலகத்தில் வாழுகின்ற மனிதர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், சிறகும் செதிளும் உள்ள மீன்கள் எதிர் நீச்சல் அடிப்பது போல ஒரு சிலர் கிறிஸ்தவ வாழ்கையில் எவ்வளவு தடைகள் வந்தாலும், கிறிஸ்த்துவின் துணையோடு கூட ஜெயித்துவிடுவார்கள். இவர்கள் மாம்ச இச்சைகளுக்கு அடிபணிந்து போய் விபசார, வேசிதனங்களுக்கு, குடி வெறிக்கு அடிமைபட்டு போகமாட்டார்கள். காரணம் இவர்கள் சொந்த பலத்தை நம்பாமல் கர்த்தருடைய ஆவியானவரின் ஆளுகைக்கு தங்களை ஒப்புக் கொடுத்தவர்கள். எனவே ஏசாயா 59:19 வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.
ஆனால் சிறகும், செதிளும் இல்லாத மீன்களால் எத்ர்நீச்சலடிக்க முடியாதது போல, ஒரு கூட்டத்தார் கர்த்தரை தங்கள் நம்பிக்கையாக கொள்ளாமல் பாவமாகிய விபசார, வேசிதனங்களையும், குடி வெறியையும் ஜெயிக்க முடியாதவர்கள். இவர்கள், அந்த மீன்கள் சேற்றில் வாழ்ந்து அதிலுள்ள அசுத்தங்களை உண்டு வாழ்வது போல, இந்த உலகத்தின் சிற்றின்பங்களிலும், அசுத்த பாவங்களிலும் வாழ்பவர்கள். இவர்கள் ஆண்டவராகிய இயேசுவின் பார்வையில் அசுத்தமும், அருவருப்புமானவர்கள்.
ஒரு சிலர் குழந்தை பாக்கியம் இல்லையே என்று ஆண்டவரை மறுதலித்து தோற்று போனவர்கள் உண்டு. ஆனால் ஆபிரகாம், அன்னாள் போன்றவர்கள் எதிர் நீச்சலடித்து வெற்றிபெற்றார்கள்.
ஒரு சிலர் தாங்க முடியாத வியாதியினிமித்தம் தோற்று போனவர்கள் உண்டு. ஆனால் யோபு, எசேக்கியா ராஜா போன்றோர் தங்கள் வியாதியோடு போராடி ஜெயித்தார்கள்.
இன்னும் சிலர் திருமண வாழ்வில் வந்த தோல்விகளினிமித்தம் இயேசுவை மறுதலித்து தோற்று போனவர்கள் உண்டு, ஆனால் மோபாவிய பெண்ணாகிய ரூத்தோ தன கணவன் மரித்து போய் நம்பிக்கையில்லாத சூழ்நிலையிலும், இஸ்ரேலின் தேவனாகிய கர்த்தரை சார்ந்து கொண்டதினிமித்தம், போவாஸ் என்னும் ஆத்ம மணாலனால், நேச போர்வையால் மூடப்பட்டாள்.
அந்நிய தேசத்தில் அடிமைப்பட்டுப் போன யோசேப்பும், தானியேலும் சிறைச்சாலையிலும், சிங்கக் கெபியிலும் அடைக்கபட்டலும், அவர்களுக்கு தேவனாகிய கர்த்தர் மேலிருந்த விசுவாசமும், அன்பும் குறைந்துபோகவில்லை. ஆம் ஆகவே தான் அவர்கள் வரலாற்றிலும், வேதாகமத்திலும் என்றும் நீங்கா இடம்பெற்றனர்.
பரலோக ராஜ்யம் தோற்று போனவர்களின் சங்கமம் அல்ல, அது ஜெயம் பெற்றவர்களின் கூட்டம். பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தின விசேசத்தில் மட்டும் சுமார் ஏழுக்கும் மேற்பட்ட முறை ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ என்று சொல்லப்பட்டுள்ளது. பரலோக ராஜ்யம் தரிசு நிலமாய் போனாலும் பாவியான ஒரு மனுசனை அங்கீகரிக்காது. வேதாகமத்தில் தோற்று போனவர்களின் பெயர்களை உச்சரிக்க கூட அது வெட்கபடுகிறது. அதாவது லோத்தின் மனைவி, யோபுவின் மனைவி என்று எழுதப்பட்டுள்ளதே தவிர, அந்த பெண்மணிகளின் பெயரை வேதாகமம் உச்சரிக்கவில்லை. ஏழை லாசருவின் பெயரை வெட்கபடாமல் எழுதிய வேதாகமம்; ஐஸ்வர்யவானை, ஐஸ்வர்யவான் என்ற புனை பெயரோடு தான் அழைத்ததே தவிர அவனுடைய பெயரை வேதாகமம் மறந்து போனது. ஆம் பிரியமான நண்பர்களே நாம் பரிசுத்தமாய் வாழ்ந்தால் தேவன் தன்னுடைய பொற்கரத்தால் நம்முடைய பெயர்களை ஜீவ புஸ்தகத்தில் எழுதிடுவார். நாம் பாக்கியம் பெற்றவர்களாய் மாறிடுவோம்.
ஆகவே எனதருமை நண்பர்களே நாம் இயேசுவை போல பரிசுத்தமாய் வாழ நம்மால் இயன்ற வரை பாடுபடுவோம். இதை எழுதுகிற எனக்கும், இதை வாசிக்கிற உங்களுக்கும் தேவன் பரிசுத்தமாய் வாழ வேண்டிய கிருபைகளை தருவாராக!
II கொரிந்தியர் 2:14 கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
I கொரிந்தியர் 15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment