இயேசுவுக்கே மகிமை
உயிர்த்தெழுந்த ஆண்டவர்
கிராமம் ஒன்றில் விவசாயி ஒருவன் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். விவசாயிக்கு குழந்தை இல்லாதால், அவர்கள் ஒரு கீரிப் பிள்ளையை வளர்த்து வந்தார்கள். அதை தங்கள் சொந்த பிள்ளையைப் போன்று செல்லமாக வளர்த்து வந்தனர். வருடங்கள் சில உருண்டோடின, அதன் பின்பு அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தையை மிகுந்த பாசத்தோடு பாலூட்டி, சீராட்டி வளர்த்து வந்தனர்.
அன்று அந்தி சாயும் அந்த மாலை வேளையில் விவசாயியின் மனைவி தண்ணீர் எடுக்கும்படி வெளியே சென்றிருந்தாள், விவசாயியும் வெளியே போயிருந்தான், குழந்தையானது தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென தோட்டத்திலிருந்து வந்த ஒரு ராஜா கரு நாகம் குழந்தையை தாக்க முற்ப்பட்டது. இதை கவனித்த கீரிப்பிள்ளை உடனடியாக குழந்தையை காப்பாற்றும் படி கரு நாகத்தோடு போராடி, நாகத்தை கடித்து குதறி கொன்று போட்டது. தன் உயிரை பணயம் வைத்து, போராடி கீரிப்பிள்ளை குழந்தையை காப்பாற்றியது. கீரிப்பிள்ளைக்கு மிகுந்த சந்தோசம், மட்டுமல்ல அது தன் எஜமாட்டி தன்னை பாராட்டுவார்கள் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு கூட முகமெல்லாம் இரத்தத்தோடும், ரத்தக் காயங்களோடும் அவளுடைய வருகைக்காய் காத்திருந்தது. தன் எஜமாட்டி தூரத்திலிருந்து வருவதை பார்த்த கீரிப்பிள்ளை, வெற்றி களிப்போடு அவளை எதிர்கொண்டு சென்றது.
நடந்ததை அறியாத எஜமாட்டி, ரத்தத்தோடு வந்த கீரிப்பிள்ளையை பார்த்தவுடன், அவளுடைய இதயம் பதறியது. குழந்தையை கீரிப்பிள்ளை கடித்து கொன்று விட்டது என நினைத்து, தான் கொண்டு வந்த தண்ணீரால் நிரம்பிய குடத்தை, கீரிப்பிள்ளையின் தலையில் அப்படியே ஆத்திரத்தோடு போட்டுவிட்டாள். அந்தோ பரிதாபம் குழந்தையை காப்பாற்றிய கீரிப்பிள்ளை செத்துப்போனது. அவசரமாக வீட்டினுள் நுழைந்தாள், இரத்தக்கறைகளை பார்த்தவளுக்கு இன்னும் இதயம் வேகமாக அடித்தது. பக்கத்தில் போய் தொட்டிலில் எட்டிப் பார்த்தாள், குழந்தை அமைதியாய் தூங்கிக் கொண்டிருந்தது. தொட்டிலின் கீழே பார்த்தாள், நாகப் பாம்பு செத்து கிடந்தது. அப்போது தான் நடந்தது என்ன என்பது அவளுக்கு புரிந்தது.
ஆம் அருமை நண்பர்களே ஆண்டவராகிய இயேசுவும் கூட சிலுவையிலே பிசாசை எதிர்த்து போராடி வெற்றி சிறந்தார். உயிர்த்தெழுந்த ஆண்டவர் வெற்றி களிப்போடு நம்மை எதிர்கொண்டு வருபோது நாமோ அவரை வெள்ளைக்காரனுடைய தெய்வம் என்று சொல்லி கேவலப் படுத்துகிறோம். மட்டுமல்ல அநேகப் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் குடித்து, வெறித்து தெருவில் தங்கள் பிள்ளைகள் விழுந்து கிடக்கும்போது வருத்தப் பட மாட்டார்கள். ஆனால் அவர்கள் சுவிஷேசத்தை அறிந்து இயேசுவை ஏற்றுக் கொண்டால், தங்கள் பிள்ளைகள் ஏதோ தவறு செய்தவர்களை போல பார்கிறார்கள். இதினிமித்தம், கிறிஸ்துவையும் கிறிஸ்தவர்களையும் தூசிக்கிறார்கள்.
சிந்திப்போம்! இயேசு செய்த தியாகத்தை எண்ணிப் பார்ப்போம்.
கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment