இயேசுவுக்கே மகிமை
கழுகுகளை போல உயர உயர பறப்போம்
ஏசாயா 40:31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
இன்றைய நவீன உலகம் மிகவும் பரபரப்பான உலகம். காத்திருப்பது என்பது மிக மிக கடினமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் பரிசுத்த வேதாகமம் கூறுகிறது கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களோ என்று. ஆம் இன்று பல விதமான காத்திருப்புகள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று கர்த்தருக்கு காத்திருப்பது. இன்று நாம் கர்த்தருக்கு காத்திருக்க மறந்து போகும்போது, கர்த்தரும் நம்மை மறந்து போகிறார். இதினிமித்தம் நாம் மருத்துவமனைகளில், நீதிமன்றங்களில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகிறது. எனவே நாம் தேவ சமுகத்தில் காத்திருப்பது மேன்மையான அனுபவமாகும்.
சங்கீதம் 103:5 கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.
கழுகின் ஆயுள்நாட்கள் சுமார் 300 ஆண்டுகள். இவ்வளவு நீண்ட நாட்கள் அது வாழ்வதற்கு ஒரு ரகசியத்தை அது அறிந்து வைத்துள்ளது. அதாவது பல ஆண்டுகள் வாழ்ந்தவுடன் அதற்கு முதுமை ஏற்படுகிறது. உடனடியாக அது மிகப்பெரிய கன்மலை உச்சியில் போய் அமர்ந்து, தன்னுடைய பழைய ரக்கைகளை பாறையின் மேல் அடித்து உதிர்த்து விட்டு, அந்த கன்மலையின் மேல் சில மாதங்கள் காத்திருக்கிறது. அப்பொழுது அதனுடைய தேவையற்ற கொழுப்புகள் கரைந்து போகிறது. அதே வேளையில் அதற்கு புதிய சிறகுகள் முளைத்து அது ஒரு இளம் கழுகாக மாறுகிறது. இப்போது அதற்கு ஒரு புதுபெலன் உண்டாகிறது, எனவே அது தன் செட்டைகளை அடித்து உயரே எழும்பி பறக்கிறது. அந்த கழுகு எங்கே காத்திருந்தது தெரியுமா? கன்மலையின் மேல் காத்திருந்தது. அந்த கன்மலை எதைக் குறிக்கிறது. I கொரிந்தியர் 10:4 எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. ஆம் அருமை நண்பர்களே நாமும் கன்மலையாகிய கிறிஸ்த்துவின் பாதத்தில் காத்திருக்க கற்றுக்கொள்வோம்.
உபாகமம் 32:11 கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,
கழுகானது முட்டையிடுவதற்கு முன்பு நேர்த்தியாக கூடு கட்டும் ஞானமுள்ள ஒரு பறவை. நல்ல கடினமான காய்ந்த மரத்தின் கம்புகளால், கூடு கட்டி அதன் மேல் முட்களால் ஆன ஒரு அடுக்கு. அதன்மேல் பழைய துணிகள் அல்லது மென்மையான ஒரு அடுக்கு. அதன் மேல் தன்னுடைய மென்மையான சில இறகுகள் வைத்து அழகாக கூடு கட்டி அதிலே முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கிறது. சிறு குஞ்சுகள், தாயினுடைய அரவணைப்பிலும், அதனுடைய பராமரிப்பிலும் பஞ்சு போன்ற கூட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறது. வேளா வேளைக்கு தாய் பறவை அதற்கு உணவு ஊட்டுகிறது. குஞ்சுகளுக்கு எந்த கவலையுமில்லை.
நாட்கள் செல்லுகிறது, குஞ்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பிக்கிறது. தாயினுடைய பராமரிப்பால் குஞ்சுகள் கொழுத்து வளருகிறது. எனவே குஞ்சுகள் அதிக எடையுள்ளதாக காணப்படுகிறது. அப்பொழுது தாய் பறவை ஒன்றை புரிந்து கொள்ளுகிறது, இப்படியே நாம் விட்டுவிட்டால் குஞ்சுகளால் பறக்க முடியாது , எனவே அவைகள் சொந்தமாக தனக்கு வேண்டிய ஆகாரத்தை தேடிக்கொள்ள முடியாது என்று.
எனவே அது குஞ்சுகளுக்கு கொடுக்கும் ஆகாரத்தை கொஞ்சம், கொஞ்சமாக குறைக்க ஆரம்பிக்கிறது. குஞ்சுகளுக்கு பசிக்க ஆரம்பிக்கிறது. இவ்வளவு நாட்கள் சொகுசாய் வாழ்ந்த குஞ்சுகள் சிரமப்பட ஆரம்பிக்கிறது. இப்போது தாய் கழுகு அந்த கூட்டின் மேல் வைத்திருந்த தன்னுடைய மென்மையான இறகுகளை எடுத்துவிடுகிறது. குஞ்சுகளுக்கு இன்னும் சற்று வாழ்க்கை கசக்க ஆரம்பிக்கிறது. மீண்டும் தாய் கழுகு அந்த பழைய துணிகளை எடுத்து விடுகிறது, அதோடு கூட அவைகளுக்கு கொடுக்கும் ஆகாரத்தை இன்னும் குறைக்கிறது. இப்போது குஞ்சுகளை அந்த கூட்டினுடைய முட்கள் குத்த ஆரம்பிக்கிறது, பசிக்கொடுமை வேறு, குஞ்சுகள் அப்பொழுது நினைக்கும் அவ்வளவு தான் தங்களுடைய வாழ்க்கை முடியப் போகிறது என்று. ஆனால் நடப்பது என்ன தெரியுமா? அந்த நாட்களில் அந்த குஞ்சுகளுடைய எடை குறைந்து, அவைகள் பறப்பதற்கு உருவாகிக் கொண்டிருக்கின்றன.
இப்போது அந்த குஞ்சுகள் பசியின் கொடுமையால், கொஞ்சம் கொஞ்சம் பறக்க முயற்சிக்கிறது. அப்போது தாய் பறவை தன்னுடைய சிறகுகளின் மேல் அந்த குஞ்சுகளை சுமந்து கொண்டு பறக்கிறது. இப்போது குஞ்சுகளுக்கு இது ஒரு உன்னத அனுபவமாக இருக்கிறது, இதனால் மீண்டும் அந்த குஞ்சுகளுக்கு ஒரு ஆனந்தம் ஏற்படுகிறது. ஆம் குஞ்சுகளுக்கு விமானத்தில் பறப்பது போன்ற ஒரு அனுபவம். இதுவும் அதிக நாள் நீடிப்பதில்லை. தாய் கழுகு மிக அதிக உயரத்தில் பறந்து, திடீரென தன் சிறகின் மேல் உள்ள சிறு கழுகை கீழே விட்டு விடுகிறது. இதை சற்றும் எதிர்பாராத குஞ்சு ஐயோ! செத்தேண்டா என்று கதறும். ஆனால் தாய்ப் பறவை மிக அதிவேகமாக கீழே பறந்து வந்து அந்த சிறு கழுகு கீழே விழுந்து விடாதபடி தன் சிறகுகளின் மேலே தாங்கிகொள்ளும். இப்படியாக அது மீண்டும் மீண்டும் செய்ய அந்த சிறு கழுகு தன் பயம் நீங்கி பறக்க கற்று கொள்ளுகிறது. ஆம் அது தன் செட்டைகளை அடித்து உன்னதத்தின் உயர் ஸ்தலத்தை நோக்கி உயர, உயர பறக்க ஆரம்பிக்கிறது.
எனதருமை நண்பர்களே கிறிஸ்தவர்களாகிய நமக்கும் கூட பாடுகள், உபத்திரவங்கள் வரவில்லை என்றால் நாமும்
T .V யே கதி என்று அதன் முன்பே அமர்ந்து விடுவோம். ஆனால் பாடுகள், உபத்திரவங்கள், வேதனைகள் வரும்போதுதான் நேரம் கிடைக்காவிட்டாலும் எப்படியாகிலும் நேரத்தை உருவாக்கி தேவ சமுகத்தில் அமருவோம். ஏன் ஒரு கிறிஸ்தவனுக்கு தேவன் பாடுகளை அனுமதிக்கிறார். அவனை உருவாக்கவே. பாடுகள் வருபோது தான் நாம் பரிசுத்தத்தை அடைய முடிகிறது. பாடுகளும், உபத்திரவமும் நம்மக்கு பறக்க கற்று தருகிறது. ஆம் உன்னதத்தை(இயேசுவை) நோக்கி உயர, உயர பறக்க நமக்கு கற்று தருகிறது.
A lovely song............
http://www.youtube.com/watch?
When god drops you from the edge of the hill,
Do not hate him; He may not catch you,
But he will teach you how to fly.
கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment