இயேசுவுக்கே மகிமை
மரித்துப்போன புனிதர்கள் அற்புதம் செய்ய முடியுமா?
மரித்துப் போன புனிதர்கள் அற்புதம் செய்ய முடியுமா? என்ற ஒரு கேள்வி எழுப்பினால் முடியாது என்பதே இதனுடைய விடையாக இருக்கும். நான் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய பொருட்கள் ஏதாவது காணாமல் போகும்போது, என்னுடைய அம்மா அல்லது பாட்டி அந்தோணியாரிடம் கேட்கும்படி எனக்கு சொல்லித் தருவார்கள். நானும் அந்தோணியாரே இந்த பொருளை எனக்கு கண்டுபிடித்து தந்தால் 25 பைசா காணிக்கை தருவேன். சீக்கிரமாக கண்டுபிடித்து தாருங்கள் என்று விண்ணப்பம் பண்ணுவேன். நான் பெரியவனான போது, தேவனுடைய கிருபையினால் பலமுறை முழு வேதாகமத்தையும் படிக்கும் படி தேவன் கிருபை பாராட்டினார். இதன் மூலம் பல சத்தியங்களை கற்றுக் கொண்டேன்.
நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஒரு சம்பவத்தை சுட்டிக் காட்டலாம். அதாவது எலிசாவினுடைய கல்லறையில், மரித்துப் போன ஒருவனுடைய பிரேதத்தைப் போட்ட போது அது உயிரடைந்தது. அப்படியானால் மரித்துப்போன பரிசுத்தவான்களால் அற்புதம் செய்யமுடியம் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் உண்மை அதுவல்ல.
II ராஜாக்கள் 13:
20. எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.
21.அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம் பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.
மரித்துப்போனவர்கள் கிறிஸ்த்துவின் எண்ணிமுடியாத சந்தோசத்திற்குள் பிரவேசிப்பதால், அதன் பின்பு அவர்கள் இந்த பூமியையோ, அல்லது தன்னுடைய சொந்த பிள்ளைகளையோ நினைக்க வாய்ப்பேயில்லை. மாத்திரமல்ல அவர்களுக்கு நாம் பேசுவதை கேட்கவும் முடியாது. ஆனால் பாதாளத்திற்கு சென்றவர்கள் இந்த பூமியை நினைத்து பார்ப்பார்கள். அங்கு அக்னி கடலில் தாங்க முடியாத வேதனையில் துடிப்பதாலும், தாகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காததாலும் வேதனையினால் இந்த பூமியை நினைத்துப் பார்ப்பார்கள். இயேசுவை ஏற்று கொள்ள வாய்ப்புகிடைத்தும், தவறவிட்டதினால் ஐயோ பாதாளத்திற்கு வந்துவிட்டேனே என்று அங்கலாய்ப்பார்கள். மட்டுமல்ல, தன்னுடைய உயிரோடிருக்கும் சகோதரர்களாவது இந்த அக்னிகடலுக்கு தப்பவேண்டுமென்று நினைப்பார்கள். ஆகவே தான் ஐஸ்வர்யவான் தன்னுடைய சகோதரர்களை நினைவுகூர்ந்தான்.
லூக்கா 16 :
22. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.
23. பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
24. அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
25. அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
26. அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிக்கிறது என்றான்.
27. அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்து பேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,
28. நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
29. ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.
எலிசாவினுடைய கல்லறையில் விழுந்த பிரேதம் உயிரோடு எழும்பிய அற்புதத்தில் உள்ள ரகசியம் என்னவென்றால், எலியா தீர்க்கதரிசி பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமுன், தன்னுடைய ஊழியக்காரனாகிய எலிசாவிடம் உனக்கு என்ன வேண்டுமென்று கேட்டான். அப்பொழுது எலிசா தீர்க்கதரிசி உம்முடைய ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாக வேண்டுமென்று கேட்டான்.
II இராஜாக்கள் 2:9 எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.
எலியா தீர்க்கதரிசி தன் வாழ்நாளில் சுமார் எட்டு அற்புதங்கள் செய்துள்ளார். அப்படியானால் ஆவியின் வரம் இரட்டிப்பாய் பெற்ற எலிசா பதினாறு அற்புதங்களை செய்யவேண்டும். ஆனால் எலிசா மரிக்குமுன்புவரை பதினைந்து அற்புதங்கள் மட்டுமே செய்துள்ளார். அந்த மீதமுள்ள ஒரு அற்புதம் நடைபெற வேண்டுமென்பதால், கடைசி அற்புதமாக அந்த செத்துப் போன பிரேதம் உயிரோடு எழுந்தது. இதன் மூலம் வானமும், பூமியும் ஒழிந்து போனாலும் என் வார்த்தைகள் ஒழிந்து போகாது என்ற ஆண்டவரின் வார்த்தை எவ்வளவு உண்மை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment