Friday, April 23, 2010

பன்றியும் அதன் அசுத்த வாழ்கையும்

இயேசுவுக்கே மகிமை

பன்றியும் அதன் அசுத்த வாழ்கையும்

லேவியராகமம் 11:7 பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

உபாகமம் 14:8 பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.

நான்கு கால்களால் நடமாடும் பிராணிகளில் மிகவும் அருவருப்பான ஜீவ ஜந்து பன்றி. காரணம் இது அசுத்தத்தையே சாப்பிட்டு, அசுத்தத்திலேயே வாழும் பிராணி. பழைய ஏற்பாட்டில் இதை சாப்பிடவோ, தொடவோ கூடாது.

பன்றி ஒரு போதும் தன் தலையை உயர்த்தி வானத்தை அண்ணாந்து பார்க்காது. எப்போதும் பன்றி அசுத்தத்தையே நோக்கிப் பார்க்கும். எனவே இதன் தலை எப்போதும் பூமியை நோக்கியே இருக்கும். பன்றி எப்போதும் சேற்றிலே புரள்வதையே விரும்பும்.

புதிய ஏற்பாட்டில் பன்றியை, பாவத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு ஒப்பிடலாம். ஆம் பாவ சேற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன், ஒரு போதும் உன்னதத்தையோ அல்லது பரலோகத்தையோ, அதில் வாசம் பண்ணும் தேவனையோ நோக்கி பார்க்க மாட்டன். பன்றி அசுத்தத்தை நோக்கிப் பார்ப்பது போல இவர்கள், உலகத்தின் சிற்றின்பங்களாகிய விபச்சாரம், வேசித்தனம், குடி, வெறி, களியாட்டு, சினிமா, பீடி, சிகரெட் இவைகளையே நோக்கிப்பார்ப்பார்கள்.

பாவ சேற்றில் வாழும் ஒரு மனிதனுக்கு இயேசுவின் சுவிஷேசத்தை கூறினால் அவன் அவைகளை அவமதிப்பதோடு, அவர்களை தாக்குவதற்கு முற்படுவான். ஆகவே தான் பரிசுத்த வேதம் கூறுகிறது,

மத்தேயு 7:6 உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.

இயேசுவின் ராத்தத்தினால் கழுவப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் ஜாக்கிரதையுள்ளவர்களாய் இராவிட்டால் நாமும் வழிதவறிப்போக வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சம்பவம் நடந்தால் வேதம் நம்மை பார்த்து சொல்லும்,

II பேதுரு 2:22 நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.

அப்படி ஒரு பரிசுத்த குலைச்சல் உங்களுக்கும், எனக்கும் வராதபடி நம்மை காத்துக்கொள்ள வேண்டிய கிருபைகளை தேவன் நமக்கு தருவாராக!

மேலும் ஒரு மனிதனிலிருந்து புறப்படுகிற அசுத்த ஆவி, பரிசுத்தமில்லாமல் வாழும் வேறொரு மனிதனுக்குள் புகுந்து விட வாய்ப்புகள் உள்ளன.

மத்தேயு 8:31 அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவு கொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.

ஒரு மனிதனுக்குள் பிசாசு இருக்குமேயானால், அந்த மனிதனுக்கு மருத்துவர்களால் அடையாளம் கடுபிடிக்க முடியாத வியாதிகள் வரலாம், சமாதான குறைவுகள் வரலாம். இதினிமித்தமாக பிசாசு அவர்களை தற்கொலைக்கு தூண்டி அவர்களுக்கு அழிவை உண்டுபண்ண வாய்ப்புகள் உண்டு.

மாற்கு 5:13 அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது.

ஆகவே கிறிஸ்த்துவுக்குள் பிரியமான நண்பர்களே பாவத்தை விட்டு, பரிசுத்தமாய் வாழ நாம் பிரயாசப்படுவோம். அதற்கு வேண்டிய கிருபைகளை தேவன் நமக்கு தருவாராக!

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment